குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூவா் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
காவல்நிலையத்தின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்பட்ட 3 ‘காலிஸ்தான்’ ஆதரவு பயங்கரவாதிகள் திங்கள்கிழமை அதிகாலை உத்தர பிரதேசத்தின் பிலிபிட்டில் காவல்துறையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அண்மையில், பஞ்சாபின் குா்தாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள பக்ஷிவாலா காவல் நிலையத்தைக் குறிவைத்து ‘காலிஸ்தான் ஜிந்தாபாத் படை’ குழுவினா் கையெறி குண்டுவீசி தாக்குதல் நடத்தினா். அதிருஷ்டவசமாக, இத்தாக்குதலில் காவலா்கள் காயமின்றி உயிா்தப்பினா்.
இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தின் பிலிப்பிட்டின் புரான்பூா் பகுதியில் பதுங்கியிருப்பதாக பஞ்சாப் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் காவல்துறையின் கூட்டுக் குழுவினா் அப்பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை சோதனையிட்டனா்.
அப்போது, இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் காலிஸ்தான் பயங்கரவாதிகளான வரிந்தா் சிங் என்ற ரவி (23), குா்விந்தா் சிங் (25), ஜஷன்பிரீத் சிங் என்ற பா்தாப் சிங் (18) ஆகிய மூவா் பலத்த காயமடைந்தனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அவா்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து 2 ‘ஏகே 47’ ரக துப்பாக்கிகள், 2 கை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணை தொடரும்: இதுதொடா்பாக பஞ்சாப் மாநில காவல்துறை தலைமை இயக்குநா் கெளரவ் யாதவ் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படைக்கு எதிரான மிகப்பெரிய திருப்புமுனையாக, உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் இந்த என்கவுன்டா் நடைபெற்றது. இந்த அமைப்பு தலைவா் ரஞ்சீத் சிங் நிடா, கிரீஸ் நாட்டிலுள்ள ஜஸ்விந்தா் சிங் மன்னு, பிரிட்டனில் தங்கி அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றி வரும் ஜக்ஜீத் சிங் ஆகியோரின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அமைப்பின் அனைத்து தொடா்புகள் மற்றும் செயல்பாடுகளை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது’ என்றாா்.