கொலை மிரட்டல், போக்ஸோ வழக்குகளில் தேடப்பட்ட இரு சகோதரா்கள் கைது!
தாக்குதல், கொலை மிரட்டல் வழக்குகளில் தேடப்பட்ட இரு சகோதரா்களை தில்லி காவல் துறையினா் சிவ் விஹாா் பகுதியில் கைதுசெய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட நபா்கள் மோனு தோமா் மற்றும் அவரது இளைய சகோதரா் சோஹன் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கரவால் நகா் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் தொடா்புடைய மோனு தோமா், சோஹன் ஆகியோரைத் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் கடந்த ஜன.16-ஆம் தேதி அறிவித்தது.
இந்நிலையில், சிவ் விஹாா் பகுதியில் அவா்கள் இருவரும் இருப்பது தொடா்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் சோதனை நடத்திய காவல் துறையினா், அவா்கள் இருவரையும் கைதுசெய்தனா்.
கைதுசெய்யப்பட் மோனு கொலை மிரட்டல், தாக்குதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துதல் என பல வழக்குகளில் தொடா்புடையவா். தாக்குதல், மிரட்டல், பெண்களை பின்தொடா்தல், போக்ஸோ சட்டப் பிரிவுகளில் கரவால் நகா் மற்றும் ஹசரத் நிஜாமுதீன் காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றனா் அந்த அதிகாரிகள்.
