
தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாக ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் செயலிழந்து காணப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக தட்கல் முன்பதிவு நேரத்தில் ஐஆர்சிடிசி தளம் செயலிழந்துள்ளது.
அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள், தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை இந்திய ரயில்வேவில் உள்ளது.
இந்தப் பயணச்சீட்டை ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் நேரடியாகவும், ஐஆர்சிடிசி வலைதளம் அல்லது செல்போன் செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும்.
குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், குளிர்சாதனம் அல்லாத படுக்கை மற்றும் உட்கார்ந்து செல்வதற்கான வகுப்புகளுக்கு காலை 11 மணி மணிக்கும் ஆன்லைனில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குகிறது.
இந்த நிலையில், புத்தாண்டு நாளன்று பயணத்தை மேற்கொள்வதற்காக குளிர்சாதன வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு இன்று காலை 10 மணியளவில் தொடங்கியுள்ளது.
ஆனால், ஐஆர்சிடிசி வலைதளம் மற்றும் செல்போன் செயலிகள் செயலிழந்ததால் பயணிகளால் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஐஆர்சிடிசி வலைதளத்தின் புகைப்படங்களை பகிர்ந்து வாடிக்கையாளர்கள ரயில்வே துறையை விமர்சித்துள்ளனர்.
“ஐஆர்சிடிசி இணையதளம் இன்று காலை 10 மணி முதல் முடங்கியுள்ளது, என்னால் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை. நான் வாடிக்கையாளர் சேவையை அழைத்தபோது, தளம் பராமரிப்பில் உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள், இந்த உலகில் யார் வேலை நேரத்தில் தளத்தை பராமரிப்பில் வைத்திருக்கிறார்கள் என்று கேட்க விரும்புகிறேன். உங்கள் தகவல் தொழில்நுட்ப குழுவை மாற்ற வேண்டும்” என்று ஒரு பயணி பதிவிட்டுள்ளார்.
மூன்றாவது முறை
இந்த மாதத்தில் இதுபோன்று ஐஆர்சிடிசி செயலி செயலிழப்பது இது மூன்றாவது முறையாகும்.
கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தட்கல் நேரத்தில் சுமார் ஒரு மணிநேரமாக ஐஆர்சிடிசி வலைதளம் பராமரிப்புப் பணியில் இருந்தது. அதேபோல், டிசம்பர் 26ஆம் தேதி வலைதளம் மற்றும் செல்போன் செயலி இரண்டும் ஒன்றரை மணிநேரமாக பராமரிப்புப் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.