பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக பணியாளர் கைது!

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்த இந்திய தூதரக பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக பணியாளர் கைது!

புது தில்லி : ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபரை, பயங்கரவாத தடுப்புப் படை(ஏடிஎஸ்) கைது செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஷாமஹிதின்பூர் பகுதியைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சக பணியாளரான சதேந்திர சிவால் என்ற நபர், மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  

ஐஎஸ்ஐ அமைப்பிடம் பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்ந்த முக்கியமான உயர்மட்ட தகவல்களை அந்த நபர் பகிர்ந்துள்ளதாகவும், இந்திய ராணுவ தளவாடங்கள் குறித்த முக்கிய தகவல்களையும் ஐஎஸ்ஐ அமைப்பிடம் வழங்கியதாக உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப் படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐ அமைப்பு சில தரகர்கள் மூலம், வெளியுறவுத்துறை அமைச்சக பணியாளர்களை பணத்தை காண்பித்து ஆசை வார்த்தை கூறி, அவர்கள் மூலம் முக்கிய தகவல்களை பெற்று வருவதாக  பயங்கரவாத தடுப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சதேந்திர சிவாலிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com