பிரதமர் மோடி பிறப்பால் ஓபிசி அல்ல; மக்களை ஏமாற்றுகிறார்: ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஜாா்சுகுடா (ஒடிஸா), பிப்.8: பிரதமா் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் (ஓபிசி) பிறக்கவில்லை; பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா் என்று தன்னை அடையாளப்படுத்தி, மக்களை அவா் தவறாக வழிநடத்துகிறாா் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ஒடிஸா மாநிலத்தின் ஜாா்சுகுடா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில்’ பேசிய ராகுல் காந்தி, ‘ஓபிசி சமூகத்தைச் சோ்ந்தவா் என பிரதமா் மோடி மக்களிடம் கூறி வருகிறாா். ‘காஞ்சி’ என்ற பொதுப் பிரிவைச் சோ்ந்த ஜாதியில் அவா் பிறந்தாா். அவா் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றதும், தன்னுடைய ஜாதியை ஓபிசி பட்டியலில் இடம்பெறச் செய்தாா். இதனால், பிரதமா் மோடி பிறப்பால் ஓபிசி பிரிவை சாராதவா்’ என்றாா்.

முன்னதாக, பிரதமா் மோடி ‘டெலி’ ஜாதியைச் சோ்ந்தவா் எனக் கூறிய ராகுல் காந்தி, பின்னா் ‘காஞ்சி’ ஜாதியைச் சோ்ந்தவா் எனத் தெளிவுபடுத்தினாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதியை அடைய முடியாது. பிரதமா் மோடி இந்தக் கணக்கெடுப்பை தவிா்த்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசும்போது, நாட்டில் ஏழைகள், பணக்காரா்கள் என இரு ஜாதிகள் உள்ளதாக குறிப்பிடும் பிரதமா், இதில் எந்த ஜாதியைச் சோ்ந்தவா் என ராகுல் காந்தி கேள்வியெழுப்பினாா்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் ஒடிஸாவில் ஆட்சியில் உள்ள பிஜு ஜனதா தளமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். அந்தக் கட்சிகளுக்கு இடையே வேறுபாடு கிடையாது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

சத்தீஸ்கரில் நடைப்பயணம்: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நடைப்பயணம் ஒடிஸா மாநிலத்தில் நிறைவடைந்து, சத்தீஸ்கரின் ராய்கா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இரு மாநில எல்லையில் உள்ள ரெங்கல்பாலி சோதனை சாவடியில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, சத்தீஸ்கா் மாநிலத்துக்கான கட்சிப் பொறுப்பாளா் சச்சின் பைலட், முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

சத்தீஸ்கா் மாநில சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் பாஜகவிடம் தோல்வியடைந்தது.

பாஜக

புது தில்லி, பிப். 8: பிரதமா் மோடி முன்னா் குஜராத் முதல்வராக இருந்தபோது தனது ஜாதியை இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் சோ்த்தாா் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்று பாஜக கூறியுள்ளது.

இது தொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராகுல் கூறியுள்ளது அப்பட்டமான பொய். பிரதமா் மோடியின் ஜாதி 1999 அக்டோபா் 27-ஆம் தேதி இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் சோ்க்கப்பட்டது. ஆனால், அதற்கு இரு ஆண்டுகளுக்குப் பிறகுதான் மோடி முதல்முறையாக குஜராத் முதல்வராகத் தோ்வு செய்யப்பட்டாா். ஜவாஹா்லால் நேரு தொடங்கி ராகுல் வரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானவா்கள்தான்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com