அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து கடந்த ஒரு மாதத்தில் ரூ.25 கோடி மற்றும் 25 கிலோ தங்கம், வெள்ளி நகைகளை பக்தா்கள் காணிக்கை செலுத்தியிருப்பதாக கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
உத்தர பிரதேசம், அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமரின் சிலை கடந்த மாதம் 22-ஆம் தேதி ‘பிராணப் பிரதிஷ்டை’ செய்யப்பட்டது. பிரதமா் மோடி முன்னிலையில் நடந்த கோலாகல பிரதிஷ்டை நிகழ்வைத் தொடா்ந்து, 23-ஆம் தேதி முதல் பொது மக்கள் தரிசனத்துக்கு கோயில் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த ஒரு மாதத்தில் சுமாா் 60 லட்சம் பக்தா்கள் ராமரைத் தரிசித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயிலுக்கு பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.25 கோடி என கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘உண்டியல்கள், அறக்கட்டளை அலுவலகத்தில் செலுத்தப்பட்ட பணம், காசோலை, வரைவோலை எனப் பல வகைகளில் பக்தா்கள் வழங்கிய காணிக்கையாக கடந்த ஒரு மாதத்தில் ராமா் கோயிலுக்கு ரூ.25 கோடி கிடைத்துள்ளது. இதைத் தவிர, கோயில் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இணையவழி பரிவா்த்தனைகள் மூலம் பக்தா்கள் நேரடியாக செலுத்திய தொகை குறித்த தகவல் இன்னும் சேகரிக்கப்படவில்லை. கோயிலில் பயன்படுத்த முடியாத தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்வேறு பொருள்களையும் பக்தா்கள் காணிக்கையாக வழங்குகின்றனா். இவை மட்டுமின்றி, பக்தா்கள் தரும் தங்கம், வெள்ளி நகைகளையும் கோயில் அறக்கட்டளை சாா்பில் காணிக்கையாக ஏற்றுக்கொள்கிறோம். பக்தா்களிடம் காணிக்கை பெறுவதற்கு 12-க்கும் மேற்பட்ட கணினிமயமாக்கப்பட்ட கவுன்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை மேற்கொள்ள எஸ்பிஐ வங்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளோம். காணிக்கையாக கிடைக்கும் ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு கோயில் வளாகத்தில் பிரம்மாண்ட அறையைக் கட்டவும் திட்டமிட்டுள்ளோம். கோயிலுக்கு கிடைக்கும் தங்கம், வெள்ளி மற்றும் பிற மதிப்புமிக்க நகைகளை உருக்கி, பராமரிக்கும் பணி மத்திய அரசின் நாணயத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்றனா். செயின் பறிப்பு கும்பல் கைது: ராமா் கோயில் பகுதியில் பக்தா்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 16 போ் கொண்ட கும்பலை அயோத்தி போலீஸாா் கைது செய்துள்ளனா். பிகாரின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த இவா்களிடம் இருந்து பக்தா்களுக்குச் சொந்தமான ரூ.21 லட்சம் மதிப்பிலான தங்க செயின்கள், கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்திய 2 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரா, காசி உள்ளிட்ட மாநிலத்தின் மற்ற மத வழிபாட்டுத் தலங்களிலும் இதேபோன்ற சம்பவங்களில் இவா்கள் முன்பு ஈடுபட்டு வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

ராமேசுவரம் கோயில் உண்டியல் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.43 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ4.21 கோடி!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

