'குஜராத்தில் எல்லாமே போலி': பட்டியலிட்ட மல்லிகார்ஜுன கார்கே!

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற போலி சம்பவங்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 'போலி குஜராத் மாடல்' என்று விமர்சித்துள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற போலி சம்பவங்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 'போலி குஜராத் மாடல்' என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “பிரதமர் குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சிறிது நேரம் ஒதுக்கி பாஜகவின் போலி குஜராத் மாடலை கவனிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். குஜராத்தில் நடைபெற்ற போலியான சம்பவங்களில் சிலவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.

கிரண் பாய் படேல் என்பவர் குஜராத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சென்று, பிரதமர் அலுவலக அதிகாரி என்ற பெயரில் ராணுவத்தை ஏமாற்றுகிறார். அதிர்ச்சியூட்டும் வகையில், மிகவும் பாதுகாப்பு வாய்ந்த பகுதிகளான அமன் சேது உள்ளிட்ட இடங்களுக்கு அவர் அரசாங்க அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். 

விராஜ் படேல் என்பவர் குஜராத்தின் முதல்வர் அலுவலக அதிகாரி என்று கூறி மோசடியில் ஈடுபட்டார். மே மாதம் அவர் கைது செய்யப்பட்ட பிறகும் காவல்துறையின் பிடியில் இருந்து தப்பினார். 2023 இறுதியில், அவர் அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில் பிடிபட்டார்.

மோர்பி மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக இயங்கி வந்த ஒரு போலி சுங்கச்சாவடி, வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.75 கோடிக்கு மேல் கட்டணம் வசூலித்தது. இதே போல ஜூனாகத் மாவட்டத்தில் பயணிகளிடம் இருந்து லட்சக்கணக்கில் வசூல் செய்த மற்றொரு போலி சுங்கச்சாவடி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் குஜராத்தின் தாஹோத் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நீர்ப்பாசனத் துறையுடன் தொடர்புடைய 6 போலி அரசு அலுவலகங்கள் இயங்கி வந்ததால் ரூ.18.59 கோடி மதிப்பிலான மோசடி நடைபெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் உள்ள போடேலி தாலுகாவில் போலி அரசு அலுவலகம் அமைத்து அரசு அதிகாரி போல் போலி கையெழுத்து, அரசு முத்திரைகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை தயாரித்து ரூ.4 கோடிக்கு மேல் அரசு மானியமும் பெற்றுள்ளனர்.

கேடா மாவட்டத்தில் போலி இருமல் மருந்து குடித்து 5 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் தயாரிக்கப்பட்ட போலி இருமல் மருந்து இடைத்தரகர்கள் மூலம் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அதே மாவட்டத்தில் உள்ள பாஜகவின் தாலுகா பிரிவின் பொருளாளர் ஆவார். 

குஜராத்தில் ஒரு சீன நாட்டவரும் அவரது கூட்டாளிகளும் போலி கால்பந்து சூதாட்ட செயலியை உருவாக்கி 1,200 பேரிடம் சில கோடிகளை ஏமாற்றியுள்ளனர்.

காந்திநகர், அகமதாபாத் மற்றும் வதோதராவில் 17 போலி நிறுவனங்கள் நீண்ட நாட்களாக விசா மற்றும் பாஸ்போர்ட் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கை, நாட்டில் போலி 2,000 ரூபாய் நோட்டுகள் மோசடியில் பாஜக ஆளும் குஜராத் மாநிலம்,  முன்னணியில் இருப்பதாகக் கூறுகிறது.

குஜராத்தில் அதிகபட்சமாக 11.28 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் இது 98% ஆகும்.

எனவே பாஜகவின் குஜராத் மாடல் என்பது ஒரு பொய்யான மாடலாகும். அங்கு எல்லாமே போலியாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com