பல்கலை.க்குள் அனுமதியில்லை: பேருந்து மீது ஏறிய ராகுல்.. காட்சியும் மாறியது!

அஸ்ஸாம் எல்லையில் உள்ள பல்கலைக்கழகத்துக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வாசலிலேயே பேருந்தின் மீது ஏறி மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
பல்கலை.க்குள் அனுமதியில்லை: பேருந்து மீது ஏறிய ராகுல்.. காட்சியும் மாறியது!

அஸ்ஸாம் எல்லையில் உள்ள பல்கலைக்கழகத்துக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வாசலிலேயே பேருந்தின் மீது ஏறி மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

'இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம்’ என்ற பெயரில் மணிப்பூா் முதல் மகாராஷ்டிரம் வரை (கிழக்கில் இருந்து மேற்கு) இரண்டாம் கட்ட பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறாா். தற்போது ராகுல் காந்தியின் நடைப்பயணம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த நடைப்பயணத்தின் போது அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால், பாஜக தொண்டர்கள் ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மேகாலய மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, இன்று காலை மீண்டும் அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாட்டி நகருக்குள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

மேகாலயா - அஸ்ஸாம் எல்லையில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்ற திட்டமிட்டிருந்தார். இதற்கான அனுமதியும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பெறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திடீரென்று இன்று காலை ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறுவதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து பல்கலைக்கழகத்தின் வாசலில் தனது பேருந்தை நிறுத்திய ராகுல் காந்தி, அதன் மீது ஏறி அங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் உரையாற்ற தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, 

“உங்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து உங்களுடன் பேச விரும்பினேன், நீங்கள் எதிர்கொள்வதை புரிந்துகொள்ள முயற்சித்தேன். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் அஸ்ஸாம் முதல்வரையும், முதல்வர் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் அழைத்து மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேச அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். 

ராகுல் காந்தி வந்தாரா, இல்லையா என்பது முக்கியமல்ல. நீங்கள் விரும்புவர்களின் பேச்சை கேட்க அனுமதிக்கப்படுகிறீர்களா என்பது தான் முக்கியம்.

ஆர்எஸ்எஸ் மற்றும் நாட்டின் தலைமைக்கு நீங்கள் கண்மூடித்தனமாக கீழ்ப்படிய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது அஸ்ஸாமில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், கல்லூரியிலும், பள்ளியிலும் நடக்கிறது.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அஸ்ஸாம் மாநிலத்தை நோக்கி சென்ற ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு குவஹாட்டி காவல்துறையினர் நகருக்குள் நுழைய அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com