மருத்துவக் காப்பீட்டில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும் வசதி

பொது காப்பீட்டுக் கவுன்சில், பொது மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, "எங்கும் பணமில்லா" சிகிச்சை பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது.
மருத்துவக் காப்பீட்டில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும் வசதி
Published on
Updated on
1 min read

மருத்துவக் காப்பீடு எடுக்கும் பயனாளிகள், சிகிச்சைபெறுவதை எளிமையாக்கும் முயற்சியாக, பொது காப்பீட்டுக் கவுன்சில், பொது மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, "எங்கும் பணமில்லா" சிகிச்சை பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த புதிய முயற்சியின் கீழ், மருத்துவக் காப்பீடு வைத்திருப்போர், தங்களது காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் இருக்கும் மருத்துவமனை அல்லாத வேறு மருத்துவமனையிலும் பணமில்லாமல் சிகிச்சை பெறும் வசதியை பெறுவார்கள். இதன் மூலம் காப்பீடு எடுப்போர், எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை தேர்வு செய்யும் சுதந்திரத்தைப் பெறுகிறார்கள்.

குறிப்பிட்ட சிகிச்சையை பெற அல்லது அவசர காலத்தில் அருகில் இருக்கும் மருத்துவமனையை ஒரு காப்பீட்டுத்தாரர் நாடும்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும், காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஏற்படும் சுமையைக் குறைக்கவும் பொது காப்பீட்டு கவுன்சில், அனைத்து பொது மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, 'எங்கும் பணமில்லா' திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது என்று பொது காப்பீட்டு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியும் ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலின் தலைவரான தபன் சிங்கேல் கூறுகையில், பாலிசிதாரர்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தவும், அவர்களுக்கு பயனளிக்கும் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரவும் பொது காப்பீட்டுக் கவுன்சில் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் ‘எங்கும் பணமில்லா’ சிகிச்சை பெறும் வசதியை அறிவிக்கிறோம் என்றார்.

பாலிசிதாரர்கள் மீது, குறிப்பாக காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது, ​​தற்போதைய விதிமுறைகள்,  கடும் அழுத்தத்தையும், நீண்ட பெரிய செயல்முறைகளையும் ஏற்படுத்துகிறது. எனவே அதனைத் தடுக்க இந்த முன்முயற்சியானது உரிமைகோரல் அல்லது பணத்தை ரீகிளைம் செய்வதற்கான செயல்முறையை எளிதாக மாற்ற முயலும்.

இதன் மூலம் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் தாரர் பெறும்  திருப்தியை அதிகரிக்கும். காப்பீடு எடுக்காதவர்களுக்கும் புது நம்பிக்கை ஏற்பட்டு, காப்பீடு எடுப்பதற்கான வழியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

மருத்துவக் காப்பீடு எடுக்கும் ஒருவர், அதன் கீழ் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது, காப்பீட்டுப் பணத்தை கோரி பெறுவது என்பது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அதோடு அல்லாமல், சிகிச்சைக்காக செலவிட்டத் தொகையில் ஒரு சிறு பகுதியே திரும்பப் பெறும் வகையில் கொள்கைகள் அமைந்திருக்கும். இந்த புதிய அறிவிப்பினால் அந்த சிக்கல் தீர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com