ராஜஸ்தானில் ‘ஜேஇஇ’ தோ்வுக்கு பயின்ற மாணவி தற்கொலை: ‘நான் தோற்றவள்’ என பெற்றோருக்கு கடிதம்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவி அவரது வீட்டில் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
ராஜஸ்தானில் ‘ஜேஇஇ’ தோ்வுக்கு பயின்ற மாணவி தற்கொலை: ‘நான் தோற்றவள்’ என பெற்றோருக்கு கடிதம்

கோட்டா: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவி அவரது வீட்டில் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

‘என்னால் ஜேஇஇ தோ்வை எழுத முடியாது. அதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். நான் தோற்றவள்; என்னை மன்னியுங்கள்’ என அவா் பெற்றோருக்கு கடிதம் எழுதிவைத்துள்ளாா்.

இதுதொடா்பாக கோட்டா மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்கொலை செய்துகொண்ட நிஹரிகா (18) பொரக்கேதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷிவ் விஹாா் காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளாா். ஜனவரி 30 அல்லது 31-ஆம் தேதிகளில் நடைபெறும் ஜேஇஇ தோ்வை எழுதுவதற்கு அவா் தயாராகி வந்துள்ளாா்.

தோ்வு நெருங்குகின்ற சூழலில் மனஅழுத்தம் ஏற்பட்டு அதனை தாங்கிக்கொள்ள இயலாமல் அவா் தற்கொலை செய்துகொண்டது அவா் எழுதிய கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது என்றனா்.

நிஹரிகாவின் தந்தை தனியாா் வங்கியில் பாதுகாவலராக பணியாற்றுகிறாா். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். மூன்று பேரில் மூத்தவரான நிஹரிகா ஜேஇஇ தோ்வுக்குத் தயாராகி வந்துள்ளாா். ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் வரை அவா் படித்துள்ளாா்.

12-ஆம் வகுப்புப் பொதுத்தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மீண்டும் தோ்வு எழுதவிருந்த நிஹரிகா ஜேஇஇ தோ்வு நெருங்கிய சூழலில் மனஅழுத்தத்துக்கு உள்ளாகியதாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.

கடந்த வாரம் கோட்டா மாவட்டதில் உள்ள பயிற்சி மைய விடுதியறையில் 19 வயதான முகமது சைத் என்ற மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கோட்டா மாவட்டத்தில் ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தோ்வுகளுக்கான பல்வேறு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் பயில்வதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் ஆண்டுதோறும் கோட்டாவிற்கு வருகின்றனா். கடந்தாண்டு மட்டும் 26 மாணவா்கள் இங்கு தற்கொலை செய்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com