
பாட்னா: ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானார்.
இந்த வழக்கில் ஆஜராக கோரி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
இந்த அழைப்பாணைகளை ஏற்று இருவரும் நேரில் ஆஜராகததால் இருவருக்கும் அமலாக்கத்துறை தரப்பில் மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி, பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு இன்று காலை வருகை தந்த லாலு பிரசாத்துக்கு ஆதரவாக அவரது கட்சித் தொண்டர்கள் குவிந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, தேஜஸ்வி யாதவ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஆதரவுடன் பிகாரில் ஆட்சி அமைத்து முதல்வராக இருந்த நிதீஷ் குமார், தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்து பாஜகவுடன் இணைந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாட்டு என்ன?
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா்.
ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சோ்ந்த சிலா், விதிமுறைகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டனா். அதற்கு லஞ்சமாக, வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும், அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட பல மடங்கு குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளது.
லாலு குடும்பத்துக்கு நெருக்கமானவரான அமித் கத்யால், இந்த வழக்கில் கடந்த நவம்பா் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத் துறை ஏற்கெனவே அழைப்பாணைகள் அனுப்பியது. ஆனால், அவா்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்துவிட்டனா். இதையடுத்து, இருவருக்கும் மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.