திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தொகை ரூ.5,142 கோடியாக அதிகரிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தொகையை ரூ.5,142 கோடியாக உயர்த்தி  திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தொகை ரூ.5,142 கோடியாக அதிகரிப்பு!

திருப்பதி : உலகப் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், 2024-2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பட்ஜெட் தொகையை ரூ.5,142 கோடியாக உயர்த்தி திருப்பதி கோயில் நிர்வாக அமைப்பான ’திருமலை திருப்பதி தேவஸ்தானம்(டிடிடி)’ ஒப்புதல் அளித்துள்ளது. 

திருப்பதி கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக ரூ.1,611 கோடி பெறப்பட்டுள்ளதாகவும், வட்டி வருமானமாக ரூ.1,167 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தை விட ரூ.100 கோடி அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், பிரசாதச் சீட்டு மூலம் ரூ.600 கோடி வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும், தரிசனைச் சீட்டு மூலம் ரூ.338 கோடி வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும், வங்கிக் கணக்கு நிலுவைத் தொகையாக ரூ.347 கோடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 20234-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொகை ரூ.5,123 கோடியாக ஆக இருந்த நிலையில், தற்போது பட்ஜெட் தொகை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத் தலைவர் பி கருணாகர ரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பட்ஜெட் தொகைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட் தொகையில் ரூ.1,733 கோடி திருப்பதி கோயில் நிர்வாக பணியாளர்களின் சம்பளத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.751 கோடியும், கோயில் பராமரிப்புச் செலவுக்காக ரூ.190 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச மாநில அரசுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பங்களிப்பு ரூ.50 கோடியாக இருக்கும்  என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com