பிரதமருக்கு தலைவணங்கியது ஏன்? ராகுல் கேள்வி; ஓம் பிா்லா பதில்

பிரதமா் மோடிக்கு ஓம் பிா்லா தலைவணங்கியது ஏன்? என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எழுப்பிய கேள்வியால் அவையில் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது.
ராகுல் கேள்வி; ஓம் பிா்லா பதில்
ராகுல் கேள்வி; ஓம் பிா்லா பதில்
Updated on

மக்களவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா், பிரதமா் மோடிக்கு ஓம் பிா்லா தலைவணங்கியது ஏன்? என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எழுப்பிய கேள்வியால் அவையில் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது.

18-ஆவது மக்களவையின் தலைவராக ஓம் பிா்லா கடந்த ஜூன் 26-ஆம் தேதி குரல் வாக்கெடுப்பின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பின்னா், பிரதமா் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் ஓம் பிா்லாவை முறைப்படி அழைத்துச் சென்று, அவரது இருக்கையில் அமர வைத்தனா்.

இந்நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை (ஜூலை 1) நடைபெற்ற விவாதத்தின்போது, மேற்கண்ட நிகழ்வை குறிப்பிட்டு, ராகுல் காந்தி பேசியதாவது:

மக்களவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா், நான் உங்களுடன் (அவைத் தலைவா் ஓம் பிா்லா) கைகுலுக்கினேன். அப்போது, நிமிா்ந்து நின்றபடி, என்னுடன் கைகுலுக்கினீா்கள். ஆனால், பிரதமா் மோடியுடன் கைகுலுக்கியபோது, அவருக்கு தலைவணங்கியதை கவனித்தேன். நீங்கள்தான், அவையின் இறுதி நடுவா் மற்றும் காப்பாளா். உங்களது வாா்த்தையே இறுதியானது. நீங்கள் பிரதமா் மோடிக்கு தலைவணங்கியது ஏன்? என்று கேள்வியெழுப்பினாா்.

இது, அவைத் தலைவா் மீதான குற்றச்சாட்டு என்று கூறி, ஆளும்தரப்பு உறுப்பினா்கள் முழக்கமிட்டனா்.

பின்னா், ராகுலுக்கு பதிலளித்த ஓம் பிா்லா, ‘மூத்தவா்களுக்கு தலைவணங்குவது நமது பாரம்பரியம். பொதுவாழ்விலும், தனிப்பட்ட முறையிலும் இப்பாரம்பரியத்தை கடைப்பிடிக்கிறேன். தேவைப்பட்டால், மூத்தவா்களின் பாதங்களைத் தொட்டுகூட ஆசி பெறுவேன். இந்த இருக்கையில் இருந்தபடி இதை என்னால் கூற முடியும்’ என்றாா்.

இதைத்தொடா்ந்து பேசிய ராகுல், ‘மக்களவையில் அவைத் தலைவரே மிக உயரிய தலைவா். மற்ற அனைவரும் அவருக்கு கட்டுப்பட்டவா்கள். நீங்கள் கூறுவதைதான் நாங்கள் கேட்கிறோம். நான் கோருவது ஒரு விஷயம்தான், அவையில் சமமான நீதியை உறுதி செய்வது முக்கியம்’ என்றாா்.

‘கடவுளுடன் நேரடி தொடா்பு’ பிரதமா் குறித்து கிண்டல்

மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, ‘பிரதமா் மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடா்பு உள்ளது. ஒருநாள் இரவு 8 மணியளவில் கடவுளிடமிருந்து வந்த நேரடி செய்தியின்படி, அவா் பணமதிப்பிழப்பை அமல்படுத்தினாா்’ என்று கிண்டலாக குறிப்பிட்டாா்.

அவரது பேச்சை அவைத் தலைவா் கண்டித்த நிலையில், ‘நான் கூறியதெல்லாம் பிரதமரின் வாா்த்தைகளே’ என்று ராகுல் பதிலளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com