

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நிறைய குழந்தைகளை பெறுவதற்காக கணவருக்கு மூன்றாவது திருமணத்தை முதல் இரண்டு மனைவிகள் செய்து வைத்தனர்.
அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்தில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இருப்பினும், கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் திருமணத்தில் எடுக்கப்பட்ட காணொலிகள் இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.
பேடாபயலு மண்டலத்துக்கு உள்பட்ட கிராமத்தில் வசிக்கும் பண்டன்னா என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டு சகேனி பார்வதம்மா என்பவரை முதல்முறையாக திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு குழந்தை இல்லாததால் முதல் மனைவியின் அனுமதியுடன் உண்மையை யாரிடமும் மறைக்காமல் இரண்டாவதாக கடந்த 2005ஆம் ஆண்டு சகேனி அப்பளம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2007ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இரண்டு மனைவி மற்றும் ஆண் குழந்தையுடன் ஒரே வீட்டில் பண்டன்னா வசித்து வந்த நிலையில், இரண்டாவது மனைவிக்கு இரண்டாவதாக குழந்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மேலும் குழந்தையை பெற்றுக் கொள்ள மூன்றாவது திருமணம் செய்ய பண்டன்னா முடிவு செய்துள்ளார்.
கணவரின் முடிவை ஏற்றுக் கொண்ட முதல் இரண்டு மனைவிகளும் மூன்றாவது திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்துள்ளனர். திருமண அழைப்பிதழ் கொடுப்பது, கிராமம் முழுவதும் கணவனின் மூன்றாவது திருமணம் குறித்து போஸ்டர் ஒட்டுவது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
இந்த திருமணம் ஜூன் 25-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மூன்று மனைவிகள், ஒரு குழந்தையுடன் பண்டன்னா ஒரே வீட்டில் வசித்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரண்டு திருமணம் செய்து கொள்வது அப்பகுதியில் சாதாரண விஷயம் என்றும், பலரும் இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மூன்று மனைவிகள் என்பது அரிதான விஷயம் என்றே தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.