
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாத்ரஸ் மாவட்டம், புல்ராய் கிராமத்தில் நடந்த ஆன்மிக கூட்டத்தின் போது இந்த சம்பவம் நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் எடாஹ் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பலியானவர்களை அடையாளம் காணும் பணியும் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் எவ்வாறு நேரிட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், காயமடைந்தவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடியிருக்கிறார்கள். இதில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, 23 பெண்கள், 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர். (முதல் கட்டத் தகவல்) இதுவரை எடாஹ் மருத்துவமனைக்கு 100 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் படுகாயம் அடைந்த சிலர் அலிகார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து விசாரிக்க காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளார். மேலும், நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணத்தொகையாக அறிவித்துள்ளார்.
ஆன்மிக நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று வெளியேற முடியாமல் தவித்ததாலும், நெரிசலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலர் இருந்ததாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தலைவர்கள் இரங்கல்:
திரெளபதி முர்மு
ஹாத்ரஸ் ஆன்மிக கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
நரேந்திர மோடி
ஹாத்ரஸ் ஆன்மிக கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் ஆன்மிக சொற்பொழிவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
மு.க. ஸ்டாலின்
ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற விழைகிறேன். இந்தத் துயர்மிகு நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நிற்போம் என் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.