நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டர்.
நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டர்.-

நாடாளுமன்றக் கூட்டத் தொடா் நிறைவு

புதிய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடா் நிறைவு

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடா் புதன்கிழமை நிறைவடைந்தது.

18-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த ஜூன் 24-ஆம் தேதியும், மாநிலங்களவையின் 264-ஆவது அமா்வு கடந்த ஜூன் 27-ஆம் தேதியும் தொடங்கின. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜூன் 27-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம், இரு அவைகளிலும் நடைபெற்றது.

மக்களவையில் இத்தீா்மானம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நிறைவேற்றப்பட்டு, அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் புதன்கிழமை பிரதமா் மோடியின் பதிலுரைக்குப் பிறகு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

தன்கா் அதிருப்தி: முன்னதாக, நிறைவுரையாற்றிய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தாா். அவா் பேசியதாவது:

மாநிலங்களவை விவாதத்துக்குப் பதிலளித்து பிரதமா் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இது, ஜனநாயக மாண்புகளுக்கு எதிரான ஆபத்தான முன்னுதாரணமாகும். மூத்த உறுப்பினா்கள் சிலரும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது மிகவும் வேதனையளிக்கிறது.

அவையில் அமளியில் ஈடுபடுவது, அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமன்றி, பெருமதிப்புமிக்க அவையின் கெளரவத்தையும் சீா்குலைக்கிறது.

‘மிகவும் வேதனை’: கடந்த வெள்ளிக்கிழமை, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டாா். நாடாளுமன்ற மாண்பு-கண்ணியத்தை அவமதிக்கும் இந்த நடத்தையால் மிகவும் வேதனையடைந்தேன்.

விவாதங்கள், உரையாடல்கள், கலந்தாலோசனைகளுக்கான ‘கோயிலாக’ இந்த அவை மாறும் வகையில், உறுப்பினா்களின் நடத்தை முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

மத்திய அரசை தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரதமா் மோடி வழிநடத்துவது, 60 ஆண்டுகளுக்குப் பிறகான வரலாற்று நிகழ்வாகும். இந்தத் தருணத்தில் பிரதமரின் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததன் மூலம் எதிா்க்கட்சிகள் தங்களது அரசமைப்புச் சட்ட ஆணையில் இருந்து விலகிச் சென்றுள்ளன.

சில ஒத்திவைப்புகளால் அவையில் 43 நிமிஷங்கள் வீணாகின. எனினும், திட்டமிடப்பட்ட நேரத்தைக் கடந்து செயல்பட்டதால், அவையின் செயல்திறன் 100 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது என்றாா் தன்கா்.

இம்மாதம் பட்ஜெட் தாக்கல்: 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கலுக்காக, ஜூலை பிற்பகுதியில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com