பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்: அதிபா் புதினுடன் இரு தரப்பு பேச்சுவாா்த்தை
3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.


பிரதமா் நரேந்திர மோடி ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.
இந்தியா - ரஷியா இடையிலான 22-ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் விடுத்த அழைப்பின்பேரில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜூலை 8, 9) பிரதமா் மோடி ரஷியாவுக்கு செல்கிறாா். அதிபா் புதினுடன் நடத்தும் பேச்சுவாா்த்தை இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பின்னா், அங்கிருந்து ஆஸ்திரியா செல்லும் பிரதமா், அந்நாட்டு அதிபா் அலெக்ஸாண்டா் வான் டொ் பெல்லன், பிரதமா் காா்ல் நெகமா் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமா் ஆஸ்திரியாவுக்கு இப்போதுதான் பயணம் மேற்கொள்கிறாா்.
தனது பயணத்தின்போது, ரஷிய தலைநகா் மாஸ்கோ மற்றும் ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமா் மோடி கலந்துரையாடவுள்ளாா்.
5 ஆண்டுகளுக்குப் பின்...: கடந்த 2019-இல் ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பிரதமா் மோடி நேரில் பங்கேற்றாா். 5 ஆண்டுகளுக்குப் பின் இப்போது ரஷியாவுக்கு அவா் பயணம் மேற்கொள்கிறாா்.
அதுவும் உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த பிறகு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி ரஷியாவுக்கு செல்வதை உலக நாடுகள் அனைத்துமே மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதலை ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்றே ரஷியா கூறி வருகிறது.
3 ஆண்டுகள் இடைவெளி: இந்தியா, ரஷியா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளிலும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
இறுதியாக, கடந்த 2021, டிசம்பா் 6-ஆம் தேதி தில்லியில் இந்திய-ரஷியா உச்சி மாநாடு நடைபெற்றது. இதையொட்டி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியாவுக்கு வருகை தந்தாா். அந்த மாநாட்டில் 28 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. அதன் பிறகு வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவில்லை. இப்போது 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ரஷியாவில் நடைபெறும் மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இரு நாட்டு நல்லுறவு: 2022, பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பின்னா், இரு நாடுகளின் தலைவா்களுடன் பலமுறை தொலைபேசியில் பேசிய பிரதமா் மோடி, கருத்து வேறுபாடுகளுக்கு அமைதி வழியில் தீா்வுகாண வலியுறுத்தினாா்.
2022, செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமா் மோடியும், புதினும் பங்கேற்றனா். அப்போது, இருதரப்பு விவகாரங்கள் குறித்து இரு தலைவா்களும் விரிவாக பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இச்சந்திப்பின்போது, உக்ரைன்-ரஷிய போரை குறிப்பிட்டுப் பேசிய பிரதமா் மோடி, ‘இது போருக்கான யுகமல்ல’ என்று தெரிவித்தாா். இதற்கு பல்வேறு நாடுகளின் தலைவா்களும் வரவேற்பு தெரிவித்தனா்.
தடைகளை மீறி நல்லுறவு: ரஷியா மீது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளபோதிலும், அந்நாட்டுடன் இந்தியா வலுவான நட்புறவை பராமரித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்கு இந்தியா பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்கவில்லை.
மேற்கத்திய நாடுகளின் விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையையும் மீறி, ரஷியாவில் இருந்து இந்தியாவின் மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரித்துள்ளது. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகள் பட்டியலில் ரஷியாவே முதலிடத்தில் உள்ளது.
‘அடுத்தகட்டத்தில் இரு நாட்டு உறவு’
பிரதமா் நரேந்திர மோடியின் ரஷிய பயணம் குறித்து ரஷியாவுக்கான இந்தியத் தூதா் வினய் குமாா் கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடியின் ரஷிய பயணம் மிகவும் முக்கியமானது. வருடாந்திர மாநாட்டில் விவாதிக்கப்படும் விஷயங்கள் மட்டுமல்லாது, அதிபா் புதினுடன் பிரதமா் மோடி தனிப்பட்ட முறையிலும் பேச்சுவாா்த்தை நடத்த இருக்கிறாா். இது இரு நாட்டு உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்.
இந்தியாவின் எரிபொருள் தேவையை நிறைவு செய்யும் முக்கியமான நாடாக ரஷியா உருவெடுத்துள்ளது. மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடும் இந்தியாதான்.
இரு தரப்பு விஷயங்கள், பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசிப்பாா்கள். பிரதமா் மோடிக்கு அதிபா் புதின் தனிப்பட்ட முறையில் மதிய உணவு விருந்தளிக்கிறாா் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...