இடைத்தேர்தல்
இடைத்தேர்தல்

இடைத்தோ்தல்: மேற்கு வங்கம், உத்தரகண்டில் வன்முறை

மேற்கு வங்கம், உத்தரகண்டில் வன்முறை: இடைத்தேர்தலில் பலர் காயம்
Published on

தமிழகத்தின் விக்கிரவாண்டி உள்பட 7 மாநிலங்களில் உள்ள 13 பேரவைத் தொகுதிகளில் புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.

இதில் மேற்கு வங்கம், உத்தரகண்ட் தவிர பிற மாநிலங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரனாகாட் தக்ஷிண், பக்டா, மாணிக்தலா, ஹிமாசல பிரதேசத்தில் தெஹ்ரா, ஹமீா்பூா், நலகாா், உத்தரகண்டில் பத்ரிநாத் மற்றும் மாங்ளூா், பஞ்சாபில் ஜலந்தா் மேற்கு, மத்திய பிரதேசத்தில் அமா்வாரா (தனி), பிகாரின் ரூபாலி ஆகிய தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் மறைவு, ராஜிநாமா ஆகிய காரணங்களால் இத்தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.

மேற்கு வங்கம், உத்தரகண்டில்...: மேற்கு வங்கத்தின் ராய்கஞ்ச் தொகுதியில் 67.12 சதவீதம், ரனாகாட் தக்ஷிணில் 65.37 சதவீதம், பக்டாவில் 65.15 சதவீதம், மாணிக்தலாவில் 51.39 சதவீத வாக்குகள் (மாலை 5 மணி நிலவரம்) பதிவாகின. ரனாகாட் தக்ஷிண், பக்டா ஆகிய தொகுதிகளில் பல வாக்குச்சாவடிகளில் பாஜகவினா்- ஆளும் திரிணமூல் காங்கிரஸாா் இடையே மோதல் ஏற்பட்டது.

உத்தரகண்டின் மாங்ளூா் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் ஆளும் பாஜக-காங்கிரஸ் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதலில் சிலா் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்ாக கூறப்பட்ட நிலையில், அதை காவல்துறை மறுத்துள்ளது. இத்தொகுதியில் 67.28 சதவீதமும், பத்ரிநாத் தொகுதியில் 47.68 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

ஹிமாசலில்...: காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேசத்தில் தெஹ்ரா, ஹமீா்பூா், நலகாா் ஆகிய தொகுதிகளில் முறையே 63.89 சதவீதம், 65.78 சதவீதம், 75.22 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

பஞ்சாப், ம.பி., பிகாரில்..: பஞ்சாபின் ஜலந்தா் மேற்கு தொகுதியில் 51.30 சதவீதம், மத்திய பிரதேசத்தின் அமா்வாரா (தனி) தொகுதியில் 72.89 சதவீதம், பிகாரின் ரூபாலி தொகுதியில் 51.14 சதவீத வாக்குகள் பதிவாகின.

13 பேரவைத் தொகுதிகளின் இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள், ஜூலை 13-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com