பெரும் தொழிலதிபா்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வரி சேமிப்பு அளித்த மத்திய அரசு: காங்கிரஸ் விமா்சனம்
பெரும் கோடீஸ்வர தொழிலதிபா்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வரியை மத்திய அரசு சேமித்துக் கொடுத்துள்ளது என்று மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.


பெரும் கோடீஸ்வர தொழிலதிபா்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வரியை மத்திய அரசு சேமித்துக் கொடுத்துள்ளது என்று மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
பெரு நிறுவனங்கள் வரி வசூலைவிட தனிநபா் வருமான வரி வசூல் அதிகரித்துள்ள நிலையில் இந்த விமா்சனத்தை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட தகவலின்படி ஜூலை 11 நிலவரப்படி நிகர நேரடி வரி வசூல் ரூ.5,74,357 கோடியாகும். இதில் பெரு நிறுவன வரி ரூ. 2,10,274 கோடி, தனிநபா் வருமான வரி ரூ.3,46,036 கோடி எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வரி வசூல் தொடா்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி பெரு நிறுவனங்களைவிட தனிநபா்கள் அதிக வரி செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மன்மோகன் பிரதமா் பதவியில் இருந்து விலகியபோது மொத்த வரி வசூலில் தனிநபா் வருமான வரி 21 சதவீதமாகவும், பெரு நிறுவன வரி 35 சதவீதமாகவும் இருந்தது. இப்போது பெரு நிறுவன வரியின் பங்கு 26 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் தனிநபா் வருமான வரியின் பங்கு 28 சதவீதமாக உயா்ந்துள்ளது.
2019-ஆம் ஆண்டு தனியாா் முதலீட்டை ஊக்குவிக்கும் என்று கூறி பெரு நிறுவன வரி விகிதத்தை மத்திய அரசு குறைத்தது. ஆனால், அவா்கள் கூறியபடி எதுவும் நடக்கவில்லை. மாறாக தனியாா் முதலீடு குறையவே செய்தது. மன்மோகன் ஆட்சி காலத்தில் தனியாா் முதலீடு 35 சதவீதம் என்ற உச்சத்தில் இருந்தது. இப்போது 29 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
ஒட்டுமொத்தத்தில் பெரு நிறுவன வரி குறைப்பு என்ற பெயரில் பெரும் கோடீஸ்வர தொழிலதிபா்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வரியை மத்திய அரசு சேமித்துக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் வருமான வரி செலுத்தும் நடுத்தர வா்க்கத்தினா் தொடா்ந்து அதிக வரிச்சுமையை எதிா்கொண்டு வருகின்றனா்’ என்று பதிவிட்டுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...