உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆா்.மகாதேவன், கோடீஸ்வா் சிங் நியமனம்
சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனா்.


புது தில்லி: சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனா்.
மணிப்பூரைச் சோ்ந்தவரான என்.கோடீஸ்வா் சிங், அந்த மாநிலத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி என்ற சிறப்பை பெற்றுள்ளாா்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த அனிருத்தா போஸ் கடந்த ஏப்ரல் மாதமும், ஏ.எஸ்.போபண்ணா கடந்த மே மாதமும் ஓய்வுபெற்றனா். இதனால் ஏற்பட்ட இரு காலியிடங்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் பெயா்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
இந்நிலையில், இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவா் நியமித்துள்ளதாக, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் எக்ஸ் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டாா்.
முன்னதாக, ‘சென்னை உயா்நீதிமன்றத்தில் இருந்து வேறு உயா்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவோா் உள்பட இந்த நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த பணிமூப்பு வரிசையில் ஆா்.மகாதேவன் 3-ஆவது இடத்தில் உள்ளாா்; அத்துடன், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா் என்ற அடிப்படையில் அவரது நியமனம் பன்முக பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும்’ தனது பரிந்துரையில் கொலீஜியம் குறிப்பிட்டது.
கடந்த 1963, ஜூன் 10-ஆம் தேதி பிறந்தவரான இவா், 2028, ஜூன் மாதம் வரை பணியில் இருப்பாா்.
மணிப்பூரைச் சோ்ந்த என்.கோடீஸ்வா் சிங், கடந்த 2011-ஆம் ஆண்டில் குவாஹாட்டி உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா், மணிப்பூா் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட அவா், கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றாா்.
அவரது நியமனம், வடகிழக்கு பிராந்தியத்துக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கும் என்று கொலீஜியம் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டது.
பெட்டிச் செய்தி...1
சென்னை உயா்நீதிமன்றத்துக்கு
புதிய பொறுப்பு தலைமை நீதிபதி
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆா்.மகாதேவன், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் பதவியேற்கவிருக்கும் நிலையில், சென்னை உயா்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாா், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக தாஷி ரப்ஸ்டன் ஆகியோரை நியமித்து, மத்திய சட்ட அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
பெட்டிச் செய்தி...2
முழு பலத்தை எட்டும் உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆா்.மகாதேவன், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் வியாழக்கிழமை பதவியேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். தற்போது 32 நீதிபதிகள் உள்ளனா். மேற்கண்ட இருவரும் பதவியேற்கும்போது, உச்சநீதிமன்றம் தனது முழு பலத்தையும் எட்டும். அதேநேரம், உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி வரும் செப்டம்பரிலும், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நவம்பரிலும் பணிஓய்வு பெறவுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...