சிறார்களின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றம்: கர்நாடக உயர்நீதிமன்றம்!
சிறார்களின் ஆபாசப்படங்களைப் பார்ப்பது குற்றமாகாது என்ற உத்தரவை திரும்பப்பெற்ற கர்நாடக உயர்நீதிமன்றம் அவற்றைப் பார்ப்பது குற்றம் என்றும், அதனைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் இனாயத்துல்லா என்பவர் மீது சிறார் ஆபாசப் படங்களைப் பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 பி-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவர் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் சுமார் 50 நிமிடங்களுக்கு சிறார் ஆபாசப் படங்களைப் பார்க்க மட்டுமே செய்ததாகவும், அதனை யாருக்கும் பரப்பவில்லை என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டது.
பிரிவு 67 பி-ன் கீழ் சிறார் ஆபாசப் படங்களை தயாரிப்பது மற்றும் பரப்புவது ஆகியவை குற்றம் என்று குறிப்பிடப்படுகிறது. எனவே, சிறார் ஆபாசப்படங்களைப் பார்ப்பது குற்றமல்ல என்று கர்நாடக நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கு அரசு சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, கடந்த வெள்ளியன்று (ஜூலை 19) தனிநபர் அமர்வான நீதிபதி நாகபிரசன்னாவிடம் மறு விசாரணைக்கு வந்தது.
மறு விசாரணையில் இந்த வழக்கில் வழங்கப்பட்டத் தீர்ப்பில், தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 67பி- ன் துணைப்பிரிவு ‘பி’-யைத் தவறுதலாகக் கவனிக்காமல் விட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அதில், “குழந்தைகளைப் பாலியல் ரீதியான முறையில் ஆபாசமாக (அ) அநாகரிகமாக சித்தரிக்கும் விடியோக்கள் மற்றும் படங்களை உருவாக்குவது, சேகரிப்பது, தேடுவது, பரப்புவது, பதிவிறக்குவது, விளம்பரப்படுத்துவது ஆகியவை குற்றமாகக் கருதப்படும்” என்று குறிப்பிட்ட உயர்நீதிமன்றம் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
”நீதிபதிகள் தவறாகத் தீர்ப்பு வழங்கியிருந்தால் அதனைத் திருத்தும் வாய்ப்பு உள்ளது. முன்னதாக வெளியான உத்தரவில் தவறு இருப்பதாக தெரிந்தும் அதனை நிலைநாட்டுவது சரியாக இருக்காது” என்று அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.