எல்லை தாண்டிய இன்னொரு காதல் கதை..!

பாகிஸ்தான் மணப்பெண்ணுக்கும் ராஜஸ்தான் மாப்பிள்ளைக்கும் மெக்காவில் டும்.. டும்.. டும்..!
எல்லை தாண்டிய இன்னொரு காதல் கதை..!
படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
Published on
Updated on
2 min read

பாகிஸ்தான் மணப்பெண்ணுக்கும் ராஜஸ்தான் மாப்பிள்ளைக்கும் மெக்காவில் திருமணம் நிகழ்ந்துள்ள சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த 25 வயது நிரம்பிய மேவிஷ் என்ற இளம்பெண்ணுக்கு ரெஹ்மான் என்ற ராஜஸ்தான் வாலிபருடன், பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இந்த நிலையில், தனது காதலனுடன் கைகோர்ப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து எல்லைகளைக் கடந்து ராஜஸ்தானிலுள்ள பைகானெர் மாவட்டத்திற்கு சென்றடைந்துள்ளார் மேவிஷ்.

இதற்காக, லாகூரை சேர்ந்த மேவிஷ் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு வாகா எல்லைக்கு கடந்த 25-ஆம் தேதி சென்றடைந்துள்ளார். இந்தியாவுக்குள் நுழைய 45 நாள்கள் சுற்றுலா விசா பெற்றுள்ள அவரிடம், எல்லைச் சோதனைச் சாவடியில் ஆவணங்களை சரிபார்த்த பின், இருநாட்டு அதிகாரிகளும் அவரை இந்தியாவுக்குள் அனுமதித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்தியா வந்தடைந்த மேவிஷை மணமகன் வீட்டார் வரவேற்று தங்களுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனிடையே பாகிஸ்தானிலிருந்து ஒரு இளம்பெண் ராஜஸ்தானில் நுழைந்த தகவல் காவல்துறைக்கு தெரிய வரவே, உடனடியாக உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், மணமகன் ரெஹ்மானுக்கு கழுத்தில் மாலை விழுவது இது முதன்முறையல்ல, அவருக்கு ஏற்கெனவே கடந்த 2011-ஆம் ஆண்டு, பத்ரா பகுதியை சேர்ந்த ஃபரிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளதும், இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் பிறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பின், இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக தற்போது ஃபரிதா ரெஹ்மானை விட்டுப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

எல்லை தாண்டிய இன்னொரு காதல் கதை..!
20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது!

இந்த நிலையில் தன்னை விட்டுப் பிரிந்து வாழும் தனது கணவன் ரெஹ்மான் பாகிஸ்தான் பெண்ணை மணமுடிக்கப் போகும் தகவல் ஃபரிதாவுக்கு தெரியவரவே, உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் ரெஹ்மான் தன்னை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மேவிஷ் பாகிஸ்தானை சேர்ந்த உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியிருப்பது கவனிக்கத்தக்கது.

இது குறித்து மேஹ்விஷ் கூறியதாவது, தான் சிறு வயதிலேயே தனது தாயாரை இழந்துவிட்டதாகவும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தனது தந்தையும் காலமாகிவிட்டாதாகவும், அதனைத் தொடர்ந்து தனது சகோதரியுடன் இஸ்லாமாபாத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு ஒரு அழகு நிலையத்தில் பயிற்சி பெற்று, கடந்த 10 ஆண்டுகளாக சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல மேவிஷ்க்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பாதாமி பாக் பகுதியை சேர்ந்த நபரை திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 12, 7 வயது நிரம்பிய இரு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குவைத்தில் பணிபுரிந்து வந்த ரெஹ்மானிடம் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது திருமண ஆசையை தெரிவித்துள்ளார் மேவிஷ். அதற்கு ரெஹ்மான் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து காணொலி முறையில் இவர்கள் இருவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் கடந்த ஆண்டு, மெக்காவில் இவர்கள் இருவரும் நேரடியாக சந்தித்து, அவர்களது வழக்கப்படி திருமணம் செய்துகொண்டனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதன்மூலம் இருவீட்டாருக்கும் தங்கள் திருமணம் குறித்து தகவலை பகிர்ந்துள்ளனர்.

எல்லை தாண்டிய இன்னொரு காதல் கதை..!
பதக்கம் வெல்ல உதவியது பகவத் கீதை: மனு பாக்கர்

எல்லைகளைக் கடந்து மலரும் காதல் விவகாரங்கள் நடப்பது இது முதன்முறையல்ல. சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்மணி ஸ்மார்ட்போன் விளையாட்டு மூலம் தனக்கு பழக்கமான நொய்டாவை சேர்ந்த நபரை காதலித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தனது காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக தனது 4 குழந்தைகளுடன் அவர் இந்தியாவுக்கு வந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

அதேபோல ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சு, தனது கணவரையும் குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு பாகிஸ்தானை சேர்ந்த தனது காதலன் நஸ்ருல்லாவை தேடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கராச்சியை சேர்ந்த அமீனா, இந்தியாவிலுள்ள அர்பாஸ் கானை மணமுடிப்பதற்காக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அமீனாவுக்கு விசா கிடைக்காததால், காணொலி மூலம் இருவரும் நேரில் சந்திக்காமலேயே திருமணம் செய்து ஆச்சரியப்படுத்தினர். மேற்கண்ட பல சம்பவங்களின் தொடர்ச்சியாக, தற்போது மேவிஷ் - ரெஹ்மான் தம்பதியின் காதல் கதையும் இணைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com