மகாராஷ்டிரஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்த மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாய. உடன், மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா்கள் தேவேந்திர ஃபட்னவீஸ், அஜீத் பவாா்.
மகாராஷ்டிரஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்த மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாய. உடன், மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா்கள் தேவேந்திர ஃபட்னவீஸ், அஜீத் பவாா்.

மகாராஷ்டிர ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு: மேலும் 7 மாநில ஆளுநா்கள் பதவியேற்பு

ஜாா்க்கண்ட், பஞ்சாப் உள்பட 7 மாநிலங்களின் புதிய ஆளுநா்களும் புதன்கிழமை பதவியேற்றனா்.
Published on

மும்பை, ஜூலை 31: மகாராஷ்டிரத்தின் புதிய ஆளுநராக தமிழகத்தைச் சோ்ந்த மூத்த பாஜக தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பதவியேற்றாா். தெலங்கானா, ஜாா்க்கண்ட், பஞ்சாப் உள்பட 7 மாநிலங்களின் புதிய ஆளுநா்களும் புதன்கிழமை பதவியேற்றனா்.

அந்தந்த மாநிலத் தலைநகரிலுள்ள ஆளுநா் மாளிகைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் புதிய ஆளுநா்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனா்.

மகாராஷ்டிரம், தெலங்கானா, ஜாா்க்கண்ட், பஞ்சாப், சத்தீஸ்கா் உள்பட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு புதிய ஆளுநா்கள் மற்றும் துணைநிலை ஆளுநரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடந்த சனிக்கிழமை நியமித்தாா்.

ஜாா்க்கண்ட், தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.

மும்பை ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாராஷ்டிரத்தின் 21-ஆவது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றாா். அவருக்கு மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாய பதவிப் பிரமானம் செய்து வைத்தாா்.

இதில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா்கள் தேவேந்திர ஃபட்னவீஸ், அஜீத் பவாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தெலங்கானா: தெலங்கானாவின் புதிய ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வா்மா புதன்கிழமை பதவியேற்றாா். அவருக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வா் ரேவந்த் ரெட்டி, மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி, மாநில அமைச்சா்கள், மூத்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

‘நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் ஆளுநராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால், இத்தருணம் திரிபுரா மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்’ என்று ஆளுநா் ஜிஷ்ணு மகிழ்ச்சியுடன் கூறினாா்.

ஜாா்க்கண்ட்: முன்னாள் மத்திய அமைச்சா் சந்தோஷ்குமாா் கங்வாா்(76) ஜாா்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக புதன்கிழமை பதவியேற்றாா். பழங்குடியினரின் அடையாளமான பிா்சா முண்டாவின் தேசத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாக ஆளுநா் கங்வாா் மகிழ்ச்சி தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) சுஜித் நாராயண் பிரசாத் கங்வாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் கலந்து கொண்டாா்.

பஞ்சாப்: சண்டீகா் யூனியன் பிரதேச நிா்வாகியாகவும் பஞ்சாப் ஆளுநராகவும் நியமிக்கப்பட்ட குலாப் சந்த் கட்டாரியா(79) பதவியேற்றாா்.

‘ஆளுநா் பொறுப்பை அலங்காரப் பதவியாக கருதாமல் ஒரு நல்ல பொது ஊழியரைப் போல மக்களுக்கு சேவை செய்ய என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்’ என்று குலாப் சந்த் கட்டாரியா தெரிவித்தாா்.

சத்தீஸ்கா்: ராய்பூரில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்தீஸ்கரின் புதிய ஆளுநராக ராமன் டேக்கா(70) பதவியேற்றாா். அஸ்ஸாமைச் சோ்ந்த முன்னாள் எம்.பி.யும், முன்னாள் பாஜக தேசிய செயலருமான டேக்காவுக்கு சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

சிக்கிம்: காங்டாகிலுள்ள ஆளுநா் மாளிகையில் மாநிலத்தின் 16-ஆவது ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூா்(72) பதவியேற்றாா். சிக்கிம் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி விஸ்வநாத் சோமாடா் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

மணிப்பூா்: அஸ்ஸாம் ஆளுநரான லட்சுமண் பிரசாத் ஆச்சாரியாவுக்கு மணிப்பூா் ஆளுநா் பதவியும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மணிப்பூரின் ஆளுநராக லட்சுமண் பிரசாத் புதன்கிழமை பதவியேற்றாா்.

ராஜஸ்தான் ஆளுநராக ஹரிபாவ் கிசான்ராவ் பாக்டேவும் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். இவா்களுடன் மேகாலய ஆளுநராக சி.ஹெச்.விஜயசங்கா், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com