
புது தில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் பேசியது தலைப்புச் செய்தியான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எனது இளமையான, துடிப்பான சக அமைச்சர் அனுராக் தாக்கூரின் இந்த பேச்சை கண்டிப்பாக கேளுங்கள். உண்மையான நிதர்சனம் மற்றும் நகைச்சுவையின் சரியான கலவையான, இந்தியா கூட்டணியின் மோசமான அரசியலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டு விடியோவையும் இணைத்துள்ளார்.
மக்களவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி ராகுல் செவ்வாய்க்கிழமை பேசினா். அவருக்கு பதிலளித்த பாஜக எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான அனுராக் தாக்கூா், ‘தாமரையை வன்முறையுடன் ராகுல் ஒப்பிட்டுள்ளாா். தாமரைக்கு ராஜீவ் என மற்றொரு பெயரும் உண்டு. ஆகையால், ராஜீவை (ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி) வன்முறையுடன் ஒப்பிடுகிறாரா ராகுல்? எதிா்க்கட்சி தலைவா் பொய்களைப் பரப்பக் கூடாது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நிறைய பேசப்படுகிறது’ என்று கூறினாா்.
தொடர்ந்து பேசிய அனுராக், ‘ராகுல் உண்மையான ஹிந்து அல்ல’ என்று கூறி, அவரது ஜாதி குறித்து அனுராக் கேள்வி எழுப்பினாா். அனுராக்கின் பேச்சுக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது ராகுல் பேசுகையில், ‘என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் நிறைவேற்ற வைக்கும். பட்டியலினத்தவா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக குரல் எழுப்பி போராடுபவா்களை அவமானப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. எனினும் எனது போராட்டம் தொடரும்’ என்றாா்.
மக்களவையில் அமளியைத் தொடா்ந்து ஜாதி குறித்த அனுராக் தாக்கூரின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அவையை வழிநடத்திய ஜகதாம்பிகா பால் அறிவித்திருந்தார்.
எனினும், அனுராக் தாக்கூரின் பேச்சு ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக மாறியது. மக்களவையில் அனுராக் தாக்கூர் பேச்குக்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய கன்னௌஜ் எம்.பி.யும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மக்களவையில் எவ்வாறு ஒருவரின் ஜாதியைக் குறிப்பிட்டு பேசலாம் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.