
ஒடிஸாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புவனேஷ்வரில் இருந்து தில்லி புறப்பட்டார்.
சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் பிஜு ஜனதா தளத்தின் பிரணாப் பிரகாஷ் தாஸை எதிர்த்து போட்டியிட்ட தர்மேந்திர பிரதான் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஒடிஸாவில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், முதல்வர் பதவிக்கான முன்னணி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் பிரதான், மாநிலத்தில் கிடைத்த வெற்றி மக்களின் வெற்றி என்றும், 4.5 கோடி ஒடிஸா மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
ஒடிஸா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாநிலத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து 25 ஆண்டுகளாக, 5 முறை முதல்வராக பதவி வகித்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் இம்முறை தோல்வியைத் தழுவியது.
ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கும் 4 கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டது. இங்கு 21 மக்களவைத் தொகுதிகளும் 147 பேரவைத் தொகுதிகளும் உள்ளன.
பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், 78 பேரவைத் தொகுதிகளில் வெற்றிபெற்று, பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 51 தொகுதிகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் 14, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரிடத்திலும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.