செல்போன் மூலம் இவிஎம்களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை! -தேர்தல் ஆணையம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறக்க ஓடிபி எதுவும் தேவையில்லை...


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை வடமேற்கு மக்களவை தொகுதியில் சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) கட்சியை சேர்ந்த வேட்பாளர் அமோல் கஜஞ்சனை விட வெறும் 48 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் சிவசேனை(ஷிண்டே அணி) கட்சியை சேர்ந்த ரவீந்திர வாய்க்கர்.
மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் விதிகளை மீறி, எம்.பி. ரவீந்திர வாய்க்கரின் உறவினர் மங்கேஷ் பண்டில்கர் கைப்பேசியை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர்.

இதனிடையே, இது குறித்து மும்பை வடமேற்கு மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி செய்தியாளர்களுடன் இன்று(ஜூன் 16) பேசியதாவது, ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(இவிஎம்) மிகுந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதில் எவ்வித முறைகேடும் செய்ய இயலாது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை. அதில் வயர்லெஸ் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை. ஆகவே இது பொய்யான தகவல்.
பொய்யான தகவலை பதிவிட்ட பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பட்டு 24 மணி நேரத்தில் உரிய விளக்கமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஜோகேஸ்வரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட, தரவு உள்ளீடு செய்யும் அலுவலர் தினேஷ் குராவ்வின் தனிப்பட்ட கைப்பேசி அங்கிருந்த சிலருக்கு கைமாறப்பட்டுள்ள சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு எவ்வித தொடர்புமில்லை. கைப்பேசிக்கு வரும் ஓடிபி எண் மூலம் டேட்டா எண்ட்ரி பணிகளுக்கு உள்ளீடு செய்ய பயன்படுகிறது. இவையனைத்தும் வேட்பாளர்கள் அல்லது முகவர்கள் முன்னிலையிலேயே நடத்தப்படுகிறது.
தோல்வியடைந்த வேட்பாளர் அமோல் கஜஞ்சன் உள்பட யாரும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரவில்லை. தபால் ஓட்டுகளை மட்டுமே எண்ண கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான விவரங்களை வெளியிட முடியும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...