
குஜராத்தின் ஜாம்நகரில் பொட்டேட்டோ வேஃபர்ஸ் எனப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் இறந்த தவளை கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், “பாலாஜி வேஃபர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த சிப்ஸ் பாக்கெட்டில் இறந்த தவளை ஒன்று கிடந்துள்ளது. ஜாஸ்மின் படேல் என்பவர் அளித்த புகாரின் பேரில் நேற்று இரவு அவர் சிப்ஸ் வாங்கிய கடையை பார்வையிட்டோம்.
முதற்கட்ட விசாரணையில் சிதைந்த நிலையில் தவளை ஒன்று கிடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியபடி, விசாரணை நடத்த சிப்ஸ் பாக்கெட்டுகளின் மாதிரிகளை சேகரித்துள்ளோம்” என்றார்.
இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக, சிப்ஸ் பாக்கெட்டின் உற்பத்தித் தொகுதியின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்படும் என்று ஜாம்நகர் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
குஜராத்தின் புஷ்கர் தாமில் வசிக்கும் ஜாஸ்மின் படேல், தனது நான்கு வயது மருமகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை அருகிலுள்ள கடையில் இருந்து சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜாஸ்மின் படேல் கூறுகையில், “ எனது மருமகளும், ஒன்பது மாத மகளும் பாக்கெட்டில் இருந்து சில சிப்ஸ்களை எடுத்து சாப்பிட்டுள்ளனர். பாக்கெட்டில் இறந்த தவளையை பார்த்த மருமகள் பொட்டலத்தைத் தூக்கி எறிந்தாள். அவள் சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால், இறந்த தவளையைப் பார்த்து நானும் அதிர்ச்சியடைந்தேன். இதுபற்றி பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனம் சரியான பதிலளிக்காததால் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளேன்” என்றார்.
சில நாட்களுக்கு முன், மும்பையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் துண்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.