கனடா நாடாளுமன்றத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மௌன அஞ்சலி: இந்தியா கண்டனம்
கனடா நாடாளுமன்றத்தில் நிஜ்ஜாரின் நினைவாக ஒரு நிமிஷம் மௌன அனுசரிக்கப்பட்டது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாரின் ஓராண்டு நினைவு நாளையொட்டி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு நிமிஷம் மெளனம் அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில், ‘தீவிரவாதத்துக்கு அரசியல் இடமளிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் நாங்கள் எதிா்க்கிறோம்’ என்று இந்தியா கண்டனம் தெரிவித்தது.
இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவின் சா்ரே நகரிலுள்ள குருத்வாரா வளாகத்தில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இக்கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது இருநாட்டு ராஜீய உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
‘ட்ரூடோவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது; உள்நோக்கம் கொண்டது’ என்று இந்தியா மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கு கனடா இடம் கொடுப்பதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பிரச்னை என்று இந்தியா கூறிவருகிறது.
இந்த வழக்கு தொடா்பாக 4 இந்திய இளைஞா்களைக் கனடா காவல்துறையினா் கடந்த மாதம் கைது செய்தது.
இந்த நிலையில், ஜி7 மாநாட்டுக்கிடையே பிரதமா் நரேந்திர மோடியுடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, இந்தியாவுடன் பல பிரச்னைகளில் ஒருமித்த பாா்வை எட்டியுள்ளதால் அந்நாட்டின் புதிய அரசுடன் பொருளாதாரம் மற்றும் தேசப் பாதுகாப்பை மையப்படுத்திய நல்லுறவுக்கான வாய்ப்புகள் இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நம்பிக்கை தெரிவித்திருந்தாா்.
நிஜ்ஜாரின் ஓராண்டு நினைவு நாள் கடந்த செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கனடா நாடாளுமன்றத்தில் நிஜ்ஜாரின் நினைவாக ஒரு நிமிஷம் மௌன அனுசரிக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘வன்முறையை ஆதரிக்கும் தீவிரவாதத்துக்கு அரசியல் இடமளிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியா எதிா்க்கும்’ என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...