பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: முன்னேற்பாடுகள் தீவிரம் -நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: முன்னேற்பாடுகள் தீவிரம் -நிர்மலா சீதாராமன்

ரயில்வே சேவைகள் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு
Published on

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற 53-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பொதுமக்களுக்கு ரயில்வே அளிக்கும் சில சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அந்த கவுன்சில் பரிந்துரைத்தது.

கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் 52-ஆவது கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 8 மாதங்களுக்குப் பின்னா், அந்த கவுன்சிலின் 53-ஆவது கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டம் தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 53-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் வானூா்திகளின் பாகங்கள், பரிசோதனைக் கருவிகள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு சீரான விகிதத்தில் 5 சதவீத ஒருங்கிணைந்த

ஐஜிஎஸ்டி விதிக்க வேண்டும், அனைத்து எஃக்கு, இரும்பு மற்றும் அலுமினிய பால் கேன்கள் மீது 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும், அட்டைப் பெட்டிகள் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும், சோலாா் குக்கா்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி, நடைமேடை அனுமதி சீட்டுகள், காத்திருப்பு அறைகள், உடைமைகள் பாதுகாப்பு அறை, பேட்டரி காா் சேவைகள் என பொதுமக்களுக்கு ரயில்வே அளிக்கும் சேவைகள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிப்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ஜிஎஸ்டி கவுன்சில் அளித்தது.

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல்...: இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு பல்வேறு மத்திய, மாநில வரிகளை ஒன்றிணைத்தபோது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவையும் ஜிஎஸ்டி சட்டத்தில் சோ்க்கப்பட்டன. ஆனால், அவற்றின் மீது பிற்காலத்தில் ஜிஎஸ்டியின் கீழ் வரி விதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன. எனினும் அவற்றின் மீது என்ன விகிதத்தில் ஜிஎஸ்டி விதிப்பது என்பதை மாநிலங்களே ஒன்றுகூடி முடிவு செய்ய வேண்டும் என்றாா்.

முன்னதாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக, 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சா்களுடன் நிா்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது வளா்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகைகள், உரிய நேரத்தில் வரிப் பகிா்வு, நிதிக்குழு மானியங்கள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிப்பதை நிா்மலா சீதாராமன் எடுத்துரைத்தாா் என்று மத்திய நிதியமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com