/

பாஜக ஆட்சியில் கல்வி முறை ஊழல்வாதிகளின் கைகளில்.. -பிரியங்கா காந்தி!

பாஜக ஆட்சியில் கல்வி முறை ஊழல்வாதிகளின் கைகளில் இருப்பதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
பிரியங்கா காந்தி- (கோப்புப் படம்)
Updated On :23 ஜூன் 2024, 7:10 am

DIN

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா நீட்-யூஜி உள்பட தேசிய போட்டித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நரேந்திர மோடி அரசு, ஒட்டுமொத்த கல்வி முறையையும் மாஃபியா மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

தேசிய தேர்வு முகமையின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்யவும், தேர்வு சீர்திருத்தங்களை பரிந்துரைக்கவும் ஒரு குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்தையடுத்து இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “நீட்-யூஜி தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது. நீட் முதுநிலைத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. யூஜிசி-நெட், சிஐஎஸ்ஆர்-நெட் ஆகிய தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

இதுதான் இன்று நாட்டின் மிகப் பெரிய தேர்வுகளின் நிலையாக இருக்கிறது.

பாஜக ஆட்சியில், ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாஃபியா மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பேராசை பிடித்தவர்களிடம் ஒப்படைத்துவிடும் அரசியல் பிடிவாதம், ஆணவம், வினாத் தாள் கசிவு, தேர்வு ரத்து ஆகியவை நமது கல்வி முறையின் அடையாளமாக மாறியுள்ளது.

பாஜக அரசால் ஒரு தேர்வைக்கூட நியாயமான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இன்றைக்கு இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தடையாக பாஜக அரசு மாறியுள்ளது. நாட்டின் திறமையான இளைஞர்கள் பாஜகவின் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் தங்களின் நேரத்தையும், ஆற்றலையும் வீணடிக்கிறார்கள். ஆனாலும், பிரதமர் நரேந்திர மோடி இந்த பிரச்னைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஜூன் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நீட் - இளங்கலை (யுஜி) உள்ளிட்ட தேர்வுகளில் ஏற்பட்ட வினாத் தாள் கசிவு போன்ற குற்றச்சாட்டுகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்டது.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைக் காரணம் காட்டி, அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வின் (CSIR-NET) ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.