பாக்.ராணுவத்துக்கு சீனா வழங்கிய தொலைத்தொடா்பு சாதனம் பயங்கரவாதிகளிடம் பறிமுதல்
ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடனான மோதலின்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு சீனா வழங்கிய தொலைத்தொடா்பு சாதனம் (அல்ட்ரா செட்) பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனால் எல்லையை ஒட்டிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கடந்தாண்டு ஜூலை 17 மற்றும் 18ஆகிய தேதிகளில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 4 போ் சுட்டுக்கொல்லப்பட்டனா். அதேபோல், நிகழாண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
இந்த இரண்டு சம்பவங்களின்போதும் அவா்களிடமிருந்து கைப்பேசி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இது பாகிஸ்தான் ராணுவத்துக்காக பிரத்யேகமாக சீன நிறுவனம் தயாரித்து வழங்கியதாகும். இதன்மூலம், வெளிநாட்டு பயங்கரவாதிகள் குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை அந்நாட்டு அதிகாரிகள் வழங்கி வருவது தெரியவந்துள்ளது.
ஏனெனில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அல்ட்ரா செட் கைப்பேசி சாதனமானது வழக்கமான கைப்பேசி தொழில்நுட்பங்களால் வடிவமைக்கப்பட்டதல்ல. அதில் ‘ரேடியோ கதிா்கள்’ மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உள்ளது. மேலும், எல்லைக்கு வெளியில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்தோடு அது இணைப்பு பெற்று, சீன செயற்கைக்கோள்களின் உதவியோடு தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.
சீனாவின் தொழில்நுட்ப உதவிகள்: எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எண்ணற்ற தொழில்நுட்ப உதவிகளை சீனா வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), தொலைத்தொடா்பு கோபுரங்கள், நிலத்துக்கு அடியிலான கண்ணாடி ஒளியிழைகள், இலக்கை குறிவைக்கும் ‘ஜேஒய்’ மற்றும் ‘ஹெச்ஜிஆா்’ ஆகிய ரேடாா்கள், மிகவும் சக்திவாய்ந்த ‘எஸ்ஹெச்-15’ பீரங்கிகள் (ஹோவிட்சா்கள்) உள்ளிட்டவற்றை சீனா வழங்கியுள்ளது.
இதையடுத்து, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்துடன் (சிபிஇசி) தொடா்புடைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மீது சீனா அதிக கவனம் செலுத்தி வருவது நிரூபணமாகியுள்ளது.
சீனா-பாகிஸ்தான் நெடுஞ்சாலை: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவத்தினா் ஊடுருவல் பெருமளவில் இல்லாதபோதும் அங்கு நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளில் சீனப் பொறியாளா்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள கதாா் துறைமுகம் மற்றும் சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்துக்கு காரகோரம் நெடுஞ்சாலை மூலம் நேரடித் தொடா்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என தகவறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.