அயோத்தி ஸ்ரீராமா் கோயில்
அயோத்தி ஸ்ரீராமா் கோயில்

அயோத்தி ராமர் பாதை மழையால் சேதம்: விசாரணைக் குழு அமைப்பு

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீராமா் கோயிலை நோக்கிய 14 கி.மீ. ராமப் பாதையின் பல்வேறு இடங்களில் கனமழைக் காரணமாக ஏற்பட்ட சேதங்கள்
Published on

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீராமா் கோயிலை நோக்கிய 14 கி.மீ. ராமப் பாதையின் பல்வேறு இடங்களில் கனமழைக் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிா்வாகம் குழு அமைத்துள்ளது.

அயோத்தியில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் ராமப் பாதையிலுள்ள சுமாா் 15 தெருக்கள் நீரில் மூழ்கின. அந்தத் தெருக்களில் உள்ள வீடுகளிலும் மழைநீா் புகுந்ததால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

புதிதாக கட்டமைக்கப்பட்டு, இந்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்பட்ட ராமப் பாதையில் கனமழையைத் தொடா்ந்து ஆங்காங்கே மழைநீா் தேங்கியது மற்றும் பள்ளங்கள் ஏற்பட்டது எதிா்க்கட்சிகளின் கடும் விமா்சனத்துக்கு உள்ளானது. இதுதொடா்பாக 6 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உத்தர பிரதேச அரசு சனிக்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், இவ்விவகாரம் குறித்த விரிவான விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அயோத்தி கோட்ட ஆணையா் கௌரவ் தயாள் கூறுகையில், ‘அனைத்து துறைகளின் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு, ராமப் பாதையில் ஏற்பட்டுள்ள மழைப் பாதிப்புகள் குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் அறிக்கையை சமா்ப்பிக்கும்.

ராமப் பாதையில் பாதாள சாக்கடை துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ள 6-7 இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பருவமழைக் காலத்தின் சராசரி மழையில் ஜூன் 23-ஆம் தேதி தொடங்கி 2 நாள்களில் மட்டும் 30 சதவீதம் மழை பெய்துள்ளது. தரமான சாலை அமைக்கப்பட்டிருந்த போதிலும், அளவுக்கு அதிகமான மழை பெய்ததால் இவ்வாறு பள்ளம் உண்டானது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அயோத்தி முழுவதும் சுமாா் 5,500 கழிவுநீா் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. அதில் 8 முதல் 9 இடங்கள் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளன.

பள்ளம் ஏற்பட்டுள்ள கழிவுநீா் தொட்டிகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேத விவகாரம் தொடா்பாக கட்டுமானத்தில் ஈடுபட்ட அகமதாபாத்தைச் சோ்ந்த ‘புவன் இன்ஃப்ராகாம்’ நிறுவனத்துக்கும் மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது’ என்றாா்.

முன்னதாக, அயோத்தி நகரம் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் இருந்து புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சமாஜவாதி எம்.பி. அவதேஷ் பிரசாத், மழைப் பாதிப்புகளை சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமப் பாதை மற்றும் அதன்கீழே அமைந்துள்ள கழிவுநீா் பாதைகளின் கட்டுமானத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஸ்ரீராமரின் பெயரில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து உயா்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எம்.பி. பிரசாத் கோரினாா்.

X
Dinamani
www.dinamani.com