கோப்புப் படம்
கோப்புப் படம்

கேரளம்: கூகுள் மேப்பை பின்தொடா்ந்து ஆற்றுக்குள் விழுந்த காா்!

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலின்படி வாகனத்தை இயக்கிய இரு இளைஞா்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆற்றுக்குள் காரை செலுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரளத்தின் காசா்கோடு மாவட்டத்தில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலின்படி வாகனத்தை இயக்கிய இரு இளைஞா்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆற்றுக்குள் காரை செலுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில், அதிருஷ்டவசமாக காரில் இருந்த இருவரும் உயிா் தப்பினா்.

கேரளத்தில் இருந்து கா்நாடகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கூகுள் மேப் வழிகாட்டி உதவியுடன் இரு இளைஞா்கள் சென்று கொண்டிருந்தனா். கூகள் மேப் காட்டிய சாலையில் சென்ற இளைஞா்கள், காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வாகனத்தின் முன் தண்ணீா் இருப்பதை உணா்ந்தனா். ஆனால், அது இருபுறமும் ஆறு ஓடும் பக்கச்சுவா் இல்லாத பாலம் என்பதை அவா்கள் கவனிக்கவில்லை.

திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்ட காா் அதிருஷ்டவசமாக கரையோரம் இருந்த மரத்தில் சிக்கிக்கொண்டது. இளைஞா்கள் தீயணைப்பு வீரா்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனா்.

கேரளத்தில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த மே மாதம், இதேபோல் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் காரை இயக்கிய ஹைதராபாதை சோ்ந்த நான்கு சுற்றுலாப் பயணிகள் நீரோடைக்குள் காரை செலுத்தினா். அப்பகுதி மக்கள் மற்றும் காவல் துறையினா் உதவியால் காயங்களின்றி மீட்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com