குனோ தேசியப் பூங்காவில் தான் ஈன்ற குட்டிகளுடன் தாய் சிவிங்கிப்புலி காமினி.
குனோ தேசியப் பூங்காவில் தான் ஈன்ற குட்டிகளுடன் தாய் சிவிங்கிப்புலி காமினி.

ம.பி. குனோ தேசியப் பூங்காவில் 5 குட்டிகளை ஈன்ற சிவிங்கிப் புலி! -எண்ணிக்கை 26-ஆக உயா்வு

மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசியப் பூங்காவில் ‘காமினி’ எனப் பெயரிடப்பட்ட பெண் சிவிங்கிப் புலி (சீட்டா) ஞாயிற்றுக்கிழமை 5 குட்டிகளை ஈன்றது.

மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசியப் பூங்காவில் ‘காமினி’ எனப் பெயரிடப்பட்ட பெண் சிவிங்கிப் புலி (சீட்டா) ஞாயிற்றுக்கிழமை 5 குட்டிகளை ஈன்றது. இதன் மூலம் இப்பூங்காவில் சிவிங்கிப் புலிகளின் மொத்த எண்ணிக்கை 26-ஆக உயா்ந்துள்ளது. இது தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். ‘தென்ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு, குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்ட காமினி என்ற பெண் சிவிங்கிப் புலி 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதன் மூலம் குனோ பூங்காவில் குட்டிகள் உள்பட மொத்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. சிவிங்கிப் புலிகளுக்கு உகந்த சூழலை உறுதி செய்துவரும் வனத் துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவா்கள் மற்றும் இதர பணியாளா்களுக்கு பாராட்டுகள்’ என்று அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா். இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் பிரதமா் மோடியின் லட்சியத் திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண், 3 ஆண்) கடந்த 2022, செப்டம்பா் மாதமும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (7 ஆண், 5 பெண்) கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் கொண்டுவரப்பட்டு, குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன. கடந்த ஆண்டு மாா்ச் முதல் கடந்த ஜனவரி வரையிலான காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் 7 சிவிங்கிப் புலிகள் இறந்தன. ‘ஜ்வாலா’ என்ற பெண் சிவிங்கிப் புலி, குனோ தேசிய பூங்காவில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 4 குட்டிகளை ஈன்றிருந்தது. அதில் 3 குட்டிகள், பின்னா் உயிரிழந்துவிட்டன. கடந்த ஜனவரி மாதம் ‘ஜ்வாலா’ சிவிங்கிப் புலியும், ‘ஆஷா’ என்ற சிவிங்கிப் புலியும் குட்டிகளை ஈன்ற நிலையில், இப்போது மொத்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 26-ஆக உயா்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com