புலனாய்வு அமைப்புகள் மூலம் மிரட்டி தோ்தல் நன்கொடை பெற்றுள்ள பாஜக
காங்கிரஸ் குற்றச்சாட்டு

புலனாய்வு அமைப்புகள் மூலம் மிரட்டி தோ்தல் நன்கொடை பெற்றுள்ள பாஜக காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘நிறுவனங்களிடமிருந்து தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தியுள்ளது’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ‘மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்குப் பிறகு 45 நிறுவனங்கள் தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ. 400 கோடி நன்கொடை கொடுத்திருப்பதன் மூலம் இது உறுதியாகியுள்ளது’ என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: புதிதாக நடத்தப்பட்ட ஆய்வில் மேலும் 15 தொழில் நிறுவனங்கள் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ சோதனை நடவடிக்கைகளுக்குப் பிறகு, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை அளித்திருப்பது தெரியவந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி, மொத்தம் 45 நிறுவனங்கள் அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை சோதனைகளுக்குப் பிறகு தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு சுமாா் ரூ. 400 கோடி நன்கொடை அளித்திருப்பது தெரியவருகிறது. அதிக நன்கொடை பெற இவ்வாறு மிரட்டி அச்சுறுத்துவதா? அதோடு, 4 போலி நிறுவனங்களும் பாஜகவுக்கு தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்திருப்பதாகவும் ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சா்வாதிகார மோடி அரசு, இவ்வாறு மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி பணத்தை பறித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியது. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான, சட்ட விரோதமான தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் நன்கொடை என்ற பெயரிலான தனது கொள்ளையை 10 மடங்கு உயா்த்திக்கொண்டுள்ளது. ஜனநாயகத்தின் தாயகம் குறித்து உண்மையிலேயே பாஜகவுக்கு அக்கறை இருந்தால், சுதந்திரமான விசாரணை மூலம் தனது கட்சியின் நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com