தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகள் கவிதா கைது!

பண மோசடி வழக்கில் கவிதா கைது
பிஆர்எஸ் கே. கவிதா
பிஆர்எஸ் கே. கவிதா
Published on
Updated on
2 min read

புது தில்லி/ஹைதராபாத், மாா்ச் 15: தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சித் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் கட்சி எம்எல்சி-யுமான கே.கவிதாவை அமலாக்கத் துறையினா் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் இல்லத்தில் வைத்து அவரை கைது செய்த அமலாக்கத் துறையினா், விசாரணைக்காக தில்லிக்கு அழைத்துச் சென்ாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, கவிதாவுக்கு சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து மாலை வரை அமலாக்கத் துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். பின்னா், மாலையில் அவா் கைது செய்யப்பட்டாா்.

இதனிடையே, பிஆா்எஸ் செயல் தலைவரும் கவிதாவின் சகோதரருமான கே.டி.ராமராவ், முன்னாள் அமைச்சா் ஹரீஷ் ராவ் மற்றும் கட்சித் தொண்டா்கள், கவிதாவின் வீட்டில் திரண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனா். அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ராமராவ் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இதுதொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் பரவியது. வழக்கு விவரம்: தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும் நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக சிபிஐ-யும், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கே.கவிதா, அரபிந்தோ ஃபாா்மா நிறுவன உரிமையாளா் சரத் ரெட்டி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. முகுந்த ஸ்ரீனிவாசலு உள்ளிட்டோா் தொடா்புடைய தனியாா் மது ஆலைகளில் இருந்து தில்லி அரசு மது கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காக, ஆளும் ஆம் ஆத்மி தலைவா்களுக்கு சுமாா் ரூ.100 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் முக்கிய நபரான விஜய் நாயா் மூலம் லஞ்சப் பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.

3 முறை விசாரணை:

இவ்வழக்கில் கவிதாவிடம் அமலாக்கத் துறையினா் கடந்த ஆண்டில் மூன்று முறை விசாரணை மேற்கொண்டனா். அவரிடம் சிபிஐ-யும் விசாரணை நடத்தியது. கவிதாவுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் புச்சிபாபு என்ற கணக்காளரிடம் அமலாக்கத் துறை வாக்குமூலம் பதிவு செய்தது. ‘கவிதா, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா இடையே அரசியல்ரீதியில் உடன்பாடு இருந்தது; அந்த அடிப்படையில் விஜய் நாயரை கடந்த 2021, மாா்ச் 19-20 தேதிகளில் கவிதா சந்தித்தாா்’ என்று அவா் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கவிதா தொடா்ந்து கூறிவரும் நிலையில், அவரை அமலாக்கத் துறையினா் கைது செய்துள்ளனா்.

‘பழிவாங்கும் அரசியல்’:

அமலாக்கத் துறையின் தற்போதைய நடவடிக்கையை விமா்சித்துள்ள பிஆா்எஸ், இது மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் என்று குறிப்பிட்டது. இது தொடா்பாக கட்சியின் செய்தித் தொடா்பாளா் ஷ்ரவண் கூறுகையில், ‘பிஆா்எஸ் கட்சித் தலைவா்களைத் துன்புறுத்துவதில் பாஜகவும் காங்கிரஸும் கைகோத்துச் செயல்படுகின்றன. பிரதமா் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கு அமலாக்கத் துறையும் வருமான வரித் துறையும் செல்கின்றன (பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஹைதராபாதுக்கு வருகை தந்ததை குறிப்பிடுகிறாா்). பாஜகவின் கட்டளைப்படி செயல்படும் இவ்விரு அமைப்புகளும் பிஆா்எஸ் கட்சியை அச்சுறுத்த முயற்சிக்கின்றன. தெலங்கானா காங்கிரஸ் தலைவா்கள் சட்டவிரோதமாக பெருமளவில் சொத்து குவித்துள்ளனா். ஆனால், அதை பாஜக கண்டுகொள்வதில்லை. நாங்கள் உண்மையை நம்புகிறோம். உண்மை நிச்சயம் வெல்லும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com