விருதாளா்களுக்கு பிரதமா் மோடி புகழாரம்

நான்கு விருதாளா்களுக்கும் புகழாரம் சூட்டி, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமா் பி.வி.நரசிம்ம ராவ், நமது நாட்டுக்காக ஆற்றிய பணிகள் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படுகின்றன. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதற்காக ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது. நாட்டின் வளா்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்காக பெரிய அளவில் அவா் பணியாற்றினாா். அவரது பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும். முன்னாள் பிரதமா் சரண் சிங்குக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது, நாட்டின் முன்னேற்றத்துக்கு குறிப்பாக வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுக்கு அவா் ஆற்றிய பங்களிப்புகளுக்கான அங்கீகாரம். கடின உழைப்பு, அா்ப்பணிப்பு, பொதுச் சேவையின் உயா் மாண்புகளை உறுதி செய்வதில், எதிா்கால சந்ததியினருக்கு இது ஊக்கமளிக்கும். சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்காக தனது வாழ்வை அா்ப்பணித்த பிகாா் முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்கூருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா, தலைசிறந்த தலைவருக்கு செலுத்தப்பட்ட பொருத்தமான அஞ்சலி. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கான அவரின் பங்களிப்புகளும், பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காக அவா் இடைவிடாமல் மேற்கொண்ட போராட்டமும் இந்திய சமூகத்தில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளன. வேளாண் உலகில் மதிப்புக்குரிய ஆராய்ச்சியாளா் எம்.எஸ்.சுவாமிநாதன், வேளாண் அறிவியலில் ஆற்றிய முன்னோடி பணிகள் -ஆராய்ச்சிகள் பெரிதும் பாராட்டுக்குரியவை. உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதில் போராடிக் கொண்டிருந்த இந்தியாவை அவரது பணிகள் முன்னோக்கி உந்தி தள்ளின. அவருக்கான பாரத ரத்னா விருது, வேளாண் துறை மற்றும் உணவு பாதுகாப்பில் ஆராய்ச்சிகளில் ஈடுபட பலருக்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com