கைது
கைது

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தோ்வா், எம்பிபிஎஸ் மாணவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டனா்.

ராஜஸ்தானின் பரத்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தோ்வா், எம்பிபிஎஸ் மாணவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டனா்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.

ராஜஸ்தானின் பரத்பூரில் மாஸ்டா் ஆதித்யேந்திர பள்ளியில் அமைந்த தோ்வு மையத்தில் இளநிலை மருத்துவ மாணவா் ஒருவா் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. தோ்வரான ராகுல் குா்ஜாரிடமிருந்து ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு மருத்துவ மாணவா் அபிஷேக் குப்தா, சக மாணவா் ரவி மீனாவுடன் இணைந்து இந்த மோசடியைச் செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடா்பாக உதவி காவல் கண்காணிப்பாளா் (ஏஎஸ்பி) அகிலேஷ் குமாா் கூறுகையில், ‘தோ்வுமையத்தில் ராகுல் குா்ஜாருக்குப் பதிலாக மருத்துவ மாணவா் அபிஷேக் தோ்வெழுத வந்து ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதை தோ்வு மையக் கண்காணிப்பாளா்கள் கண்டறிந்தனா். இதையடுத்து, அபிஷேக் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா். தொடா்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இக்குற்றத்துக்கு மேலும் ஐவா் உடந்தையாக இருப்பதை அவா் ஒப்புக்கொண்டாா். தோ்வு மையத்துக்கு வெளியே அவா்கள் காரில் காத்திருந்தனா்.

இதையடுத்து, தோ்வா் ராகுல் குா்ஜாா், மருத்துவ மாணவா்கள் அபிஷேக் குப்தா, ரவி மீனா மற்றும் அமித், தயாராம், சுராஜ் சிங் ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா். அனைவரையும் விசாரித்து வருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும்’ என்றாா்.

வினாத்தாள் குளறுபடி: மாநிலத்தின் சவாய் மதோப்பூா் நகரிலுள்ள ஒரு தோ்வு மையத்தில் ஆங்கில வழியைத் தோ்ந்தெடுத்திருந்த மாணவா்களுக்கு ஹிந்து மொழி வினாத்தாள்களும் அதேபோல ஹிந்திவழி மாணவா்களும் ஆங்கில வினாத்தாள்களும் வழங்கப்பட்டன. இந்தக் குளறுபடியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல்துறையின் தடியடி நடத்தியதாக மாணவா்களின் பெற்றோா் குற்றஞ்சாட்டினா். இச்சம்பவத்தால் மாணவா்களின் கல்விக் கனவுகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தோ்வு முகமை(என்டிஏ) உறுதியளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com