
2024 மக்களவைத் தேர்தலில் வழக்கத்தைவிடக் குறைவான தொகுதிகளில் போட்டியிடுவதாலேயே காங்கிரஸ் வலுவிழந்துவிட்டதைப் போல சித்திரிக்கப்படுகிறது. ஆனால், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் பிரசாரத்தில் அடித்து ஆடத் தொடங்கியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
சமூக ஊடகங்களில் முன்னெப்போதுமில்லாத வகையில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் செயல்படுகின்றனர். தெலங்கானா தேர்தல் பிரசாரத்தில் அதானி – அம்பானிகளிடம் காங்கிரஸ் பணம் பெற்றதா? இளவரசர் (ராகுல் காந்தி) அவர்களைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்ப, இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் எத்தனை முறை ராகுல் பேசியிருக்கிறார் என்பது உள்பட ஏராளமான எதிர்வினைகள்.
மோடியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் அதே நாள் மாலையில் ராகுல் காந்தி வெளியிட்ட விடியோ செய்தி, வெகுவாக வைரலானது. மே 11 மதிய நிலவரப்படி 57 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மோடியின் பேச்சுக்கு ஆதரவாக அல்லது வலியுறுத்தி அவருடைய ஆதரவாளர்களே எதுவும் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில்தான் உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக கன்னோஜில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்று பேசியுள்ளார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக ராகுல் காந்தி ஏதோ பலமான நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதாகத்தான் அவருடைய வேகம் தோன்றச் செய்கிறது.
உள்ளபடியே, இந்தத் தேர்தலில் வெறும் 328 தொகுதிகளில் மட்டும்தான் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நாட்டின் பாரம்பரியமிக்க, மிகப் பழமையான கட்சியான காங்கிரஸ், மக்களவைத் தேர்தலில் 400-க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.
2019 மக்களவைத் தேர்தலில் 421 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
2014 தேர்தலில் 464 தொகுதிகளில் போட்டியிட்டு 44 தொகுதிகளிலும் 2009 தேர்தலில் 440 தொகுதிகளில் போட்டியிட்டு 206 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்த முறை காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளில் போட்டியிடக் காரணம் கூட்டணிக் கட்சிகளுக்குக் கூடுதலான தொகுதிகளை விட்டுக்கொடுக்க நேரிட்டதே. இந்தியா கூட்டணியின் அங்கமான காங்கிரஸ், 2019 தேர்தலில், தான் போட்டியிட்ட சுமார் 100 தொகுதிகளை இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது.
கூட்டணிக் காலமான 1989, 1999 ஆம் ஆண்டு தேர்தல்களில்கூட 450-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டிருந்தாலும் இந்தத் தேர்தலில் - தன்னுடைய பலத்தையும் பலவீனத்தையும் நன்றாகவே உணர்ந்து - நிறைய தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸின் வெற்றி என்று அல்லாமல் இந்தியா கூட்டணி வெற்றி என்பதாகவே காங்கிரஸ் திட்டமிடுவதாகத் தோன்றுகிறது.
தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் மிக அதிக அளவிலான தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்திருக்கிறது. இந்த நான்கு மாநிலங்களில் மட்டுமே 201 தொகுதிகள் இருக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில்தான் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. 2019 தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 67 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஒரே தொகுதியில் - ராய் பரேலியில் மட்டும்தான் வெற்றி பெற்றது.
இந்த முறையும் அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், தற்போது அமேதி, ராய் பரேலி உள்பட 17 தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் சோனியா காந்தி வெற்றி பெற்ற ராய் பரேலியில் இந்த முறை – வயநாடு தவிர்த்த இரண்டாவது தொகுதியாக - ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், 42 தொகுதிகளில் 14 தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்டாலும் இரு தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற முடிந்தது.
மகாராஷ்டிரத்தில் 48 தொகுதிகள். 17 தொகுதிகளில்தான் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 21 தொகுதிகளை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனைக்கும் 10 தொகுதிகளை சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கும் விட்டுக்கொடுத்திருக்கிறது. கடந்த இரு தேர்தல்களில் முறையே 25, 26 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.
இதுபோலவே தில்லியிலும் ஹரியாணாவிலும் குஜராத்திலும் இந்தியா கூட்டணியிலுள்ள ஆம் ஆத்மி கட்சிக்குக் கணிசமான தொகுதிகளை காங்கிரஸ் விட்டுக்கொடுத்துள்ளது.
மூன்றாம் கட்ட வாக்குப் பதிவுடன் மக்களவையின் 283 தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. வரும் மே 13 ஆம் தேதி நாலாவது கட்டமாக 96 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அத்துடன் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 381 தொகுதிகளில் தேர்தல் முடிந்துவிடும். அடுத்தடுத்த மூன்று கட்டங்களில் – மே 20, மே 25, ஜூன் 1 -ல் 49, 57, 57 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப் பதிவுகள் நடைபெற வேண்டியிருக்கும்.
எல்லாம் முடிந்த பிறகு அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ல் நடைபெறவுள்ளது.
மத்தியில் ஏற்கெனவே இரண்டு முறை ஆட்சியிலிருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, மூன்றாவது முறை ஆட்சியைப் பிடிக்க – 400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் - முயலுகிறது.
ஆளும் கூட்டணியை எதிர்த்து ஆட்சியைக் கைப்பற்ற இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
வழக்கத்துக்கு மாறாகக் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடுவதைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் வலுவிழந்து விட்டதைப் போன்ற தோற்றத்தைத் தொடக்கத்தில் ஆளும் பாரதிய கட்சி போன்றவை ஏற்படுத்த முயன்றன.
ஆனால், மூன்று கட்ட வாக்குப் பதிவுகளின் முடிவில் மாநிலங்களில் பொதுவான அரசியல் நிலைமை, கட்சிகளின் செல்வாக்கு மற்றும் தேர்தல் நிலவரங்கள் காங்கிரஸ் கூட்டணியை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகின்றன.
மத்தியில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணி, வெறும் 272 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமானது.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் 328 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பல மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் வலுவான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், வெற்று கௌரவத்துக்காக அதிக தொகுதிகளில் போட்டியிட்டுத் தேவையில்லாத தோல்விகளைச் சந்தித்துத் தொகுதிகளை இழப்பதைவிட, கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து அவற்றை வெற்றி பெறச் செய்வதன் மூலம் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு, கூட்டணி ஆட்சி என்ற இலக்கை நோக்கியே அனைத்தையும் நகர்த்துவது என்பதே காங்கிரஸின் உத்தியாக இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.