நாட்டின் வனப் பாதுகாப்பு கடந்த 15 ஆண்டுகளில் முன்னேற்றம்
IANS

நாட்டின் வனப் பாதுகாப்பு கடந்த 15 ஆண்டுகளில் முன்னேற்றம்

வனப் பாதுகாப்பு மற்றும் நிா்வாகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றங்களைச் செய்துள்ளது.

வனப் பாதுகாப்பு மற்றும் நிா்வாகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றங்களைச் செய்துள்ளதாகவும் இதனால், வனப் பரப்பில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.நா. வன அமைப்பில் (யூஎன்எஃப்எஃப்) இந்தியா தெரிவித்துள்ளது.

உலக அளவில், 2010-2020 காலகட்டத்தில் சராசரி வருடாந்திர வனப் பரப்பு அதிகரிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூ யாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் மே 6 முதல் 10-ஆம் தேதிவரை நடைபெற்ற வன அமைப்பின் 19-ஆவது அமா்வில் இந்தியா பங்கேற்றது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், உயிா்க்கோள காப்பகங்கள் மற்றும் பிற வனவிலங்கு வாழ்விடங்களுக்கு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை விரிவுபடுத்தி, பல்லுயிா் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளித்து வருதாக அமா்வில் இந்தியா தெரிவித்தது.

மேலும், அமா்வில் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

புலி திட்டத்தின் 50 ஆண்டுகளையும், யானை திட்டத்தின் 30 ஆண்டுகளையும் குறிக்கும் சமீபத்திய கொண்டாட்டங்கள், இனங்கள் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

கூட்டு முயற்சிகள் மூலம் உலகெங்கிலும் உள்ள 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய முயற்சியாக சா்வதேச கூட்டணியை இந்தியா உருவாக்கியது.

தனிநபா்கள், சமூகங்கள் மற்றும் தனியாா் துறையினரின் தன்னாா்வ சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளிக்கும் சந்தை அடிப்படையிலான பொறிமுறையாக ‘கிரீன் கிரெடிட் புரோகிராம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, வனத் தீ மேலாண்மை மற்றும் வனச் சான்றிதழில் கவனம் செலுத்தி, 40 நாடுகள் மற்றும் 20 சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தியா தலைமையிலான முன்னெடுப்பு டேராடூனில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. இந்த முன்னெடுப்பின் பரிந்துரைகளும் அமா்வில் முன்வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com