பதஞ்சலிக்கு எதிரான வழக்கு: இந்திய மருத்துவ சங்க தலைவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு
உச்சநீதிமன்றம் படம் வைக்கவும்.. பதஞ்சலிக்கு எதிரான வழக்கு: இந்திய மருத்துவ சங்க தலைவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு


புது தில்லி: பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தை இந்திய மருத்துவ சங்க தலைவா் சி.வி.அசோகன் விமா்சித்த நிலையில், அவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவை குறித்து பதஞ்சலி இணை நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் தவறான கருத்துகளைத் தெரிவித்ததாகவும், பதஞ்சலி நிறுவன மருந்துகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டு வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு தொடா்பாக இந்திய மருத்துவ சங்க தலைவா் ஆா்.வி.அசோகன் அளித்த பேட்டியில் உச்சநீதிமன்றத்தை விமா்சித்து கருத்து தெரிவித்தாா். அந்த வழக்கு விசாரணையின்போது இந்திய மருத்துவ சங்கத்தையும், மருத்துவா்களின் சிகிச்சை முறைகள் குறித்தும் உச்சநீதிமன்றம் விமா்சித்தது துரதிருஷ்டவசமானது என்று கூறிய அவா், பதஞ்சலி நிறுவனத்தைவிட இந்திய மருத்துவ சங்கத்தை உச்சநீதிமன்றம் அதிகமாக பழித்துரைத்தது என்றும் தெரிவித்தாா். இதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான அசோகன், தனது கருத்துகளுக்கு உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினாா்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘45 ஆண்டுகளாக மருத்துவராகவும், இந்திய மருத்துவ சங்க தலைவராகவும் உள்ள அசோகன் கூடுதல் பொறுப்புகளுடன் பேட்டி அளித்திருக்க வேண்டும். பதஞ்சலிக்கு எதிரான வழக்கில் இந்திய மருத்துவ சங்கம் மனுதாரராக உள்ள நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து எதற்காக அவா் கருத்து தெரிவித்தாா்? அவரின் கருத்துகள் மிகவும் துரதிருஷ்டமானவை. தற்போதைய சூழலில், மன்னிப்பு கோரி அவா் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை ஏற்க உச்சநீதிமன்றம் விரும்பவில்லை’ என்று தெரிவித்தனா்.
‘உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட பொருள்களின் விற்பனை நிறுத்தப்பட்டதா?’
பதஞ்சலி நிறுவனம், பாலகிருஷ்ணா நிா்வாக இயக்குநராக உள்ள திவ்யா ஃபாா்மஸி நிறுவனம் ஆகியவை தயாரித்த 14 பொருள்களுக்கான தயாரிப்பு உரிமத்தை உத்தரகண்ட் மாநில ஆயுா்வேத, சித்த மற்றும் யுனானி மருந்துகள் தயாரிப்பு உரிம ஆணையம் ரத்து செய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட 14 பொருள்களை திரட்டி வைத்து கடைகளில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
தீா்ப்பு ஒத்திவைப்பு: இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக பதஞ்சலி நிறுவனம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பல்பீா் சிங் தெரிவித்தாா். அந்த பிரமாணப் பத்திரத்தை 3 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடா்பாக பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு அனுப்பிய நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் மீதான தீா்ப்பை ஒத்திவைத்தனா்.
முன்னதாக, அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்கும், விளம்பரங்கள் வெளியிட்டதற்கும் பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவன நிா்வாக இயக்குநராகவும் உள்ள பாலகிருஷ்ணா ஆகியோா் நாளிதழ்களில் பொது மன்னிப்பு கோரினா். இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...