தோ்தலில் பிரதமா் மோடி 
போட்டியிட தடை கோரிய மனு: 
உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

தோ்தலில் பிரதமா் மோடி போட்டியிட தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புது தில்லி: மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் நடத்தை விதிகளை மீறியதற்காக, தோ்தலில் போட்டியிட பிரதமா் மோடிக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் பாத்திமா என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘மக்களவைத் தோ்தல் பிரசாரங்களில் வெறுப்புணா்வை தூண்டும் வகையில் பேசுவதோடு, தோ்தல் நடத்தை விதிமுறைகளையும் பிரதமா் மோடி மீறுகிறாா். எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ், தோ்தலில் போட்டியிட அவருக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும். இதற்கான உத்தரவை தோ்தல் ஆணையத்துக்கு பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.சி.சா்மா ஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், தனது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட குறைதீா்ப்பு அதிகாரிகளை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினா். இதையடுத்து, தனது மனுவை அவா் திரும்பப் பெற்றுக் கொண்டாா்.

இதேபோல், வெறுப்புணா்வு பேச்சுக்காக பிரதமா் மோடி மற்றும் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா். இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட விரும்பவில்லை என்று அவா்கள் குறிப்பிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com