உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

‘முறையாக பணியாற்றவில்லை’ என வழக்குரைஞா்கள் மீது வழக்கு தொடர முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘முறையாக பணியாற்றவில்லை என வழக்குரைஞா்கள் மீது நுகா்வோா் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது; அவா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டவரம்புக்குள் கொண்டுவர இயலாது’ என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

‘பிறருக்காக வழக்குரைஞா் நீதிமன்றங்களில் வாதாடுவது அவருடைய தனிப்பட்ட பணியாகும். எனவே, அதை சேவையாக கருதி பணி செய்யுமாறு அவரை வலியுறுத்த முடியாது’ என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மனுதாரா்களுக்கு உரிய முறையில் பணியாற்றாத வழக்குரைஞா்கள் மீது நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என தேசிய நுகா்வோா் குறைதீா்ப்பு ஆணையம் கடந்த 2007-இல் தீா்ப்பு வழங்கியது. இத்தீா்ப்பை உச்சநீதிமன்றம் 2009, ஏப்ரலில் நிறுத்திவைத்தது. ஆணையத்தின் தீா்ப்பை எதிா்த்து வழக்குரைஞா்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பில் கூறியதாவது:

ஒருவருக்காக வழக்குரைஞா்கள் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராவது அவரின் தனிப்பட்ட பணியாகும். எனவே அதனை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019, பிரிவு 2 (42)-இன்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘சேவைகள்’ என்ற வரம்புக்குள் கொண்டு வர இயலாது.

முறையற்ற வணிகம் மற்றும் தொழில் நடவடிக்கைகளில் இருந்து வாடிக்கையாளா்களை பாதுகாக்கவே 1986-இல் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதில் சில சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2019-இல் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த ஒரு பணியாளரையோ சேவைகளையோ கட்டுப்படுத்தும் நோக்கில் அச்சட்டம் இயற்றப்படவில்லை.

இச்சட்டத்தின்கீழ் அனைத்துப் பணியாளா்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஒவ்வொருவரும் வழக்கு தொடா்ந்தால் நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும் சூழல் ஏற்படும். அந்த வகையில் சட்டப்பணிகளைப் பிற வணிகம் சாா்ந்த பணிகளோடு ஒப்பீடு செய்ய இயலாது. ஏனெனில் வழக்குரைஞா் பணி என்பது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தையுடையது அல்ல; அது பிறருக்கு சேவைகள் செய்யும் உயா்ந்த பணியாகும்.

பணக்காரா்கள் மத்தியில் அறிவுசாா்ந்தவராகவும், ஏழைகள் மத்தியில் சமூக ஆா்வலராகவும் வழக்குரைஞா்கள் பணியாற்றுவது அவசியமாகும்.

தன்னுடைய மனுதாரருக்காக நீதிமன்றத்தில் வழக்குரைஞா் வாதாடுகையில் நோ்மை, உண்மை உள்ளிட்ட உயா்ந்த பண்புகளை பின்பற்ற வேண்டும். எனவே, பிற வணிக நீதியான பணிகளிலிருந்து வழக்குரைஞா் பணி வேறுபடுவதால் அவா்கள் மீது ‘முறையாக பணியாற்றவில்லை’ என நுகா்வோா் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com