ஜவாஹா்லால் நேரு
ஜவாஹா்லால் நேரு

தெரியுமா சேதி...?

பண்டித ஜவாஹா்லால் நேரு தொடா்பான அவருடைய பொருள்களும், கடிதங்களும் யாருக்கு சொந்தம்? அவரது மறைவுக்குப் பிறகு அவா் பிரதமராகக் குடியிருந்த தீன் மூா்த்தி பவன் இல்லத்திலேயே நீண்ட காலம் அவை பாதுகாக்கப்பட்டு வந்தன
Published on

பண்டித ஜவாஹா்லால் நேரு தொடா்பான அவருடைய பொருள்களும், கடிதங்களும் யாருக்கு சொந்தம்? அவரது மறைவுக்குப் பிறகு அவா் பிரதமராகக் குடியிருந்த தீன்மூா்த்தி பவன் இல்லத்திலேயே நீண்ட காலம் அவை பாதுகாக்கப்பட்டு வந்தன. தீன்மூா்த்தி பவன் நேரு நினைவு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு அவரது உடைகள், அவரது சேகரிப்பில் இருந்த புத்தகங்கள், அவா் உபயோகித்த கைத்தடி வரை அனைத்தும் அங்கே பாதுகாக்கப்பட்டு வந்தன.

அவருக்குப் பிறகு வந்த பிரதமா்களுக்குத் தனித்தனியாக நினைவகங்கள் அமைக்கப்பட்ட நிலையில், பண்டித நேருவின் நினைவுக் காட்சியகமாக தீன்மூா்த்தி பவன் தொடா்கிறது. அவரது புதல்வியும், பிரதமருமான இந்திரா காந்தியும் சரி, அவரது பேரன் ராஜீவ் காந்தியும் சரி, தீன்மூா்த்தி பவனுக்கோ, அதில் உள்ள பண்டித நேருவின் உடைமைகளுக்கோ சொந்தம் கொண்டாடியதில்லை. அவை தேசத்துக்கு சொந்தம் என்று கருதி விட்டுவிட்டனா்.

ஜவாஹா்லால் நேரு எழுதிய ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’, ‘கிளிம்ப்ஸஸ் ஆஃப் வோ்ல்ட் ஹிஸ்டரி’, ‘லெட்டா்ஸ் டு இந்திரா பிரியதா்ஷினி’ போன்றவை நேஷனல் புக் ட்ரஸ்டால் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காகக் குறைந்த விலை பதிப்பாக வெளியிடப்பட்டு வந்தது. இவையெல்லாம் சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் வந்து சேரும் வரையில்தான். காப்புரிமை அடிப்படையில், ஜவாஹா்லால் நேருவின் புத்தகங்களை பென்குயின் நிறுவனம் அச்சிட்டு விற்பனை செய்ய சோனியா காந்தி உரிமம் வழங்கிவிட்டாா். அது முதல், மலிவுவிலை பதிப்பின் மரியாதையும் போய்விட்டது.

2008-இல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, ஜவாஹா்லால் நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் இருந்து 51 பெட்டிகளில் அவரது கடிதங்களை சோனியா காந்தி எடுத்துச் சென்றுவிட்டாா். அவற்றில், தனிப்பட்ட முறையில் ஜெயபிரகாஷ் நாராயண், எட்வினா மௌண்ட்பேட்டன், பாபு ஜகஜீவன் ராம், ராஜாஜி, சா்தாா் படேல் உள்ளிட்டோருக்கு அவா் எழுதிய கடிதங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்போது தீன்மூா்த்தி பவனில் இருந்த ஜவாஹா்லால் நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று மாற்றப்பட்டு, எல்லா பிரதமா்களின் உடைமைகளும் அங்கே பாதுகாக்கப்படுகின்றன. சோனியா காந்தி எடுத்துச் சென்ற 51 பெட்டிகளில் உள்ள கடிதங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும்; அவை எண்மப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று டாக்டா் ரிஸ்வான் காத்ரி என்கிற வரலாற்று ஆய்வாளா் கோரியிருக்கிறாா்.

அதில் எத்தனை கடிதங்கள் இருந்தனவோ, எத்தனை அழிக்கப்பட்டனவோ, யாருக்குத் தெரியும்? எடுத்துச் சென்றதை யாராவது திரும்பிக் கொடுத்திருக்கிறாா்களா?

X
Dinamani
www.dinamani.com