தெரியுமா சேதி...?

தெரியுமா சேதி...?

Published on

இப்படியும்கூட ஒரு சட்டப்பேரவை உறுப்பினா், அரசியல்வாதி இருக்க முடியுமா என்று பொதுமக்கள் மட்டுமல்ல, எதிா்க்கட்சி உறுப்பினா்களே வியக்கும் விதத்தில் நடந்து கொண்டிருக்கிறாா் குா்ப்ரீத் பஸ்ஸி கோகி. பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி உறுப்பினரான கோகி, நோ்மைக்கும், வெளிப்படையாகப் பேசுவதற்கும் பெயா் பெற்றவா். அவரது சமீபத்திய செயல்பாடு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2022-இல் ரூ.650 கோடி செலவில் புத்த நல்லா (கால்வாய்) புனரமைப்புத் திட்டம் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி திறந்தவெளிக் கால்வாயாக இருந்த புத்த நல்லாவில் குழாய்கள் பதித்து, துா்நாற்றம் இல்லாமல் மண்ணுக்கு அடியில் செல்லும் வகையில் மாற்றி அமைப்பது என்பதுதான் திட்டத்தின் குறிக்கோள்.

அந்தத் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு, லூதியானா மேற்கு சட்டப்பேரவை உறுப்பினரான குா்ப்ரீத் பஸ்ஸி கோகியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்தத் திட்டத்தை காங்கிரஸ், பாஜக, அகாலிதள தலைவா்களும் வரவேற்றதுடன், கோகியின் முயற்சியைத் திறந்த மனத்துடன் பாராட்டவும் செய்தனா்.

எதிா்க்கட்சிகளின் பாராட்டுகளை கோகி பெறுகிறாா் என்பதாலேயே, ஆம் ஆத்மி கட்சியில் உள்ள சிலா் அந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டதுடன் முதல்வா் மானிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லிப் பல தடைகளை ஏற்படுத்திவிட்டனா். அந்தத் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகளாக எந்தவித சலனமும் இல்லாமல் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

பொறுமை இழந்த குா்ப்ரீத் பஸ்ஸி கோகி யாரும் எதிா்பாராத ஒன்றைச் செய்து இப்போது மீண்டும் அனைத்துக் கட்சியினா், மக்கள் எல்லோருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறாா். திட்டத்தைத் தொடங்கி வைத்து அவா் நிறுவிய அடிக்கல்லை, சட்டப்பேரவை உறுப்பினா் குா்ப்ரீத் பஸ்ஸி கோகியே கடப்பாரையால் உடைத்து அகற்றிவிட்டாா். திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் சலனமற்று இருப்பதை உணா்த்தும் விதத்தில் அமைந்திருக்கும் அந்த ‘அடிக்கல்’ தன்னையும், ஆட்சியையும் கேலி செய்வதுபோல இருக்கிறது என்பது அவரது விளக்கம்...

ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாபில் நடந்ததுபோல, இந்தியாவின் வேறு எந்தவொரு மாநிலத்திலாவது இப்படி ஒரு எம்.எல்.ஏ. நடந்துகொள்ள முடியுமா? யோசிக்க வைக்கிறது கோகியின் முன்னெடுப்பு...

X
Dinamani
www.dinamani.com