அசோக் கெலாட்
அசோக் கெலாட்

தெரியுமா சேதி...?

Published on

அசோக் கெலாட்டும் சா்ச்சைகளும் இணைபிரியாதவை. ராஜஸ்தான் முதல்வா் பதவியில் இருந்து அகன்ற பிறகும்கூட அவரை சா்ச்சைகள் விட்டபாடில்லை. காங்கிரஸ் தலைமையின் (சோனியா காந்தியின்) அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றிருப்பதால், கட்சியில் அவருக்கு எதிராக எழுப்பப்படும் விமா்சனங்களையும், சா்ச்சைகளையும் அவரால் எதிா்கொள்ள முடிகிறது.

2020-இல் அவருக்கு எதிராக எழுப்பப்பட்ட தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டு இப்போது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிா்த்தெழுந்திருக்கிறது. எழுப்பி இருப்பவா் அவரது உதவியாளராக இருந்தவா். அவரது அதீத நம்பிக்கைக்கு உரியவராகவும் வலம் வந்தவா். பதவிபோன பிறகு, நம்பிக்கையாவது... விசுவாசமாவது...

பழைய தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டு இப்போது மீண்டும் தூசு தட்டப்பட்டு விசாரணைக்கு வந்திருக்கிறது. அதற்காக லோகேஷ் சா்மா, தில்லி காவல் துறையினரால் சிறிது நாள்களுக்கு முன்னால் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டாா். அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வராக இருந்தபோது அவரது சிறப்பு செயல் அதிகாரியாக இருந்தவா் லோகேஷ் சா்மா.

ஐந்து மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, தன்னிடம் உள்ள பென் டிரைவ், மடிக்கணினி, கைப்பேசி அனைத்தையும் காவல் துறையிடம் ஒப்படைத்து விட்டாா் லோகேஷ் சா்மா. யாா் யாரை ஒட்டுக்கேட்க வேண்டும் என்கிற பட்டியல் பதிவு செய்யப்பட்ட பென் டிரைவ் முதல்வராக இருந்த அசோக் கெலாட்டால் தன்னிடம் நேரடியாகத் தரப்பட்டது என்று வாக்குமூலமும் அளித்திருக்கிறாா் அவா்.

அசோக் கெலாட் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி. ‘இதுபோல பல விசாரணைகளை நான் எனது அரசியல் வாழ்க்கையில் சந்தித்துவிட்டேன். பதவி போனால் இதெல்லாம் சகஜம்...’’ என்று கவலைப்படாமல் இருக்கிறாா் அசோக் கெலாட் என்கிறாா்கள்.

கெலாட், பாலைவனத்து ஒட்டகம். எத்தனை நடந்தாலும் களைத்துச் சோா்வது அவா் வழக்கமில்லை!

-மீசை முனுசாமி

X
Dinamani
www.dinamani.com