
மணிப்பூர் வன்முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான வன்முறையில் மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில் குகி - ஸோ பழங்குடியினர் வசிக்கும் ஜைரான் ஹமர் கிராமத்துக்குள் வியாழக்கிழமை (நவ. 7) ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்கு தீவைத்தனர்.
இந்த நிலையில், பழங்குடியினப் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவரது உடலை உடற்கூறாய்வுக்காக இம்பாலுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், உடற்கூறாய்வு அறிக்கை வெளியானவுடன்தான், உண்மை தெரிய வரும் என்று கூறுகின்றனர்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 20 பேர் பலி!
இதுகுறித்து, அவரது கணவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கூறியதாவது, ``பெண்ணின் காலில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் நான் உள்பட என் குழந்தைகள், என் பெற்றோரையும் என் மனைவியைத் தனியாக விட்டுவிட்டு வெளியேறுமாறு வற்புறுத்தினர்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பெண்ணின் மீதான பாலியல் வன்கொடுமை, வீட்டை எரித்தல், இனரீதியிலான துன்புறுத்தல் முதலான பிரிவுகளில் அந்தப் பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக (53 சதவிகிதம்) உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி, நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அப்போது ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.
இதனால் இடம்பெயர்ந்த மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரு சமூகத்தினர் சார்ந்த தீவிரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிர்ச்சேதம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.