
ஜார்க்கண்டில் காங்கிரஸின் ஊழலை ஒழிக்க பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பாஜக தலைவர் அமித் ஷா பிரசாரத்தில் கூறியுள்ளார்.
ஜார்க்கண்டில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது, ``பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பழங்குடியினரின் இடஒதுக்கீட்டு வரம்பைக் குறைத்து, அதன்மூலம் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. பாஜக இருக்கும் வரை, சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கிடைக்காது என்று ராகுலை எச்சரிக்கிறேன்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பழங்குடியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு அம்பேத்கரால் கொண்டு வரப்பட்டது; நீங்கள் அவரை அவமதிக்கின்றீர்கள். காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி.யினருக்கு எதிரான கட்சி. அவர்கள் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம், ஓ.பி.சி.யினருக்கு அநீதி இழைத்தார்கள். மண்டல் கமிஷன் ஓ.பி.சி.யினருக்கு இடஒதுக்கீடு வழங்கியபோது, அதனை இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் எதிர்த்தனர்.
ஆனால், 2014 ஆம் ஆண்டில், மோடி ஆட்சியில் ஓ.பி.சி.யினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தையும் அமைத்து, அதற்கான அரசியலமைப்பு இடத்தைக் கொடுத்தார்’’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா ``தற்போதைய ஜார்க்கண்ட் அரசு ஊழலில் சிக்கியுள்ளதால், இங்கு பாஜக அரசைக் கொண்டுவருமாறு உங்களைக் கோருகிறோம். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் மூவருமே ஊழல் நிறைந்த கட்சியினர். ரூ. 300 கோடியை யாராவது பார்த்திருக்கிறார்களா? காங்கிரஸ் எம்.பி.யின் வீட்டில் ரூ. 300 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 27 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது.
காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் உதவியாளரின் வீட்டில் ரூ. 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணமெல்லாம் உங்களுடையதுதான்; இது ஜார்க்கண்டின் இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு சொந்தமானது. ஆனால், அதனை காங்கிரஸார் சாப்பிட்டு விட்டனர். நீங்கள் மாநிலத்தில் பாஜக அரசை அமைத்தால், நாங்கள் ஊழல் செய்பவர்களை சிறையில் அடைப்போம்’’ என்று கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, நவ. 23 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வெளிநாடுகளில் வேலை தேடத் தொடங்கிய அமெரிக்கர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.