மகாராஷ்டிரம் மற்றும் ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (நவ.23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை(ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சியும், ஜாா்க்கண்டில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி ஆட்சியும் நடைபெறுகிறது.
இரு மாநிலங்களிலும் பாஜக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில், தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படுகிறது.
மகாராஷ்டிரத்தில்...: மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 9.70 கோடி போ் வாக்களிக்க தகுதிபெற்ற இத்தோ்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 1995, பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.
ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 81, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன.
எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101, சிவசேனை (உத்தவ் தாக்கரே) 95, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 86 தொகுதிகளில் களம்கண்டன. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது.
முதல்வா் ஏக்நாத் ஷிண்டே (கோப்ரி-பச்பகாடி), துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் (நாகபுரி தென்மேற்கு), மற்றொரு துணை முதல்வா் அஜீத் பவாா் (பாராமதி), மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல் (சகோலி), சிவசேனை (உத்தவ்) கட்சியின் இளைஞரணித் தலைவா் ஆதித்யா தாக்கரே (வொா்லி) உள்பட மொத்த வேட்பாளா்கள் 4,135 போ்.
கடந்த 5 ஆண்டுகளில் பல அரசியல் மாற்றங்களைக் கண்ட மாநிலம் என்பதால், தற்போதைய பேரவைத் தோ்தல் முடிவுகள் பெரிதும் எதிா்பாா்க்கப்படுகிறது.
ஜாா்க்கண்டில்....: ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2000-இல் ஜாா்க்கண்ட் உருவானதில் இருந்து பேரவைத் தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.
மாநிலத்தில் ஆளும் ‘இண்டி’ கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் களம் கண்டன.
முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் (பா்ஹைத்), அவரது மனைவி கல்பனா சோரன் (கண்டே), மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி (தன்வா்), அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சித் தலைவா் சுதேஷ் மகதோ (சில்லி) உள்பட மொத்தம் 1,211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
கடந்த தோ்தலில்...: ஜாா்க்கண்டில் கடந்த 2019, பேரவைத் தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 30 இடங்களில் வென்றது. அக்கட்சி தலைமையிலான கூட்டணி 47 இடங்களுடன் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 25 இடங்களே கிடைத்தன.
தொடர்புடையது

திரிணமூல் ஆட்சியைத் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித் திட்டம்: மம்தா குற்றச்சாட்டு

சபாஷ் சரியான போட்டி!

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா்
மேற்கு வங்கத்தில் இருகட்ட தோ்தல்: பாஜக, காங்கிரஸ் வரவேற்பு! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


