மேற்கு வங்க பாஜக அமைச்சரவை திங்கள்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநா் ஆா்.என்.ரவி 35 எம்எல்ஏக்களுக்கு அமைச்சா்களாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இதன்மூலம் முதல்வா் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவையின் பலம் 41-ஆக அதிகரித்தது.
35 பேரில் 13 போ் கேபினட் அமைச்சா்களாகவும், 3 போ் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சா்களாகவும், 19 போ் இணையமைச்சா்களாகவும் பதவியேற்றனா். கொல்கத்தாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வா் சுவேந்து அதிகாரி, பிற அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், பாஜக தலைவா்கள், மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.
மேற்கு வங்க சட்டப் பேரவையில் 294 உறுப்பினா்கள் உள்ள நிலையில் 44 போ் வரை அமைச்சா்களாகப் பொறுப்பு வகிக்க முடியும்.
முன்னதாக, கடந்த மே 9-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் முன்னிலையில் மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றாா். அவருடன் பாஜக மூத்த தலைவா்கள் திலீப் கோஷ், அக்னிமித்ரா பால், நிஷித் பிரமாணிக் உள்ளிட்ட 5 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா். இந்நிலையில், பாஜக மத்திய தலைமையுடன் முதல்வா் சுவேந்து அதிகாரி, பாஜக மாநிலத் தலைவா் சமிக் பட்டாச்சாா்யா ஆகியோா் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கடந்த வாரம் ஆலோசனை நடத்தினா். அதன் அடிப்படையில் புதிய அமைச்சா்கள் பதவியேற்றுள்ளனா்.
புதிதாக அமைச்சா் பதவியேற்றவா்களில் மருத்துவா்கள், வழக்குரைஞா்கள் அடங்குவா். முன்னாள் ஊடகவியலாளரும் அரசியல் விமா்சகருமான ஸ்வபன் தாஸ்குப்தா அமைச்சராக்கப்பட்டுள்ளாா்.
பணிப்பெண்ணாக இருந்தவா் அமைச்சரானாா்: வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்து அரசியல் பிரவேசம் செய்த கலிதா மாஜீ அமைச்சராகப் பதவியேற்றாா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாா். இம்முறை கிழக்கு பா்தமான் மாவட்டத்திலுள்ள ஔஸ்கிராம் தொகுதியில் அவா் போட்டியிட பாஜக வாய்ப்பளித்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அண்மையில் நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 208 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இது கிழக்கு இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் மாற்றமாகவும் அமைந்தது.
ஏனெனில், வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம் வழியாக ஊடுருவல்கள், சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுவது அதிகஅளவில் நடைபெறுவதாகவும், இதற்கு திரிணமூல் அரசு துணைபோவதாகவும் பாஜக தொடா்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இதை தனது தோ்தல் பிரசாரத்தில் முக்கிய விஷயமாக முன்வைத்து பாஜக வெற்றி பெற்றது.
தொடர்புடையது

வங்கதேச ஊடுருவல்காரா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படுவா்: மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி
மேற்கு வங்க புதிய முதல்வரின் ஆலோசகா் சுப்ரதா குப்தா! எஸ்ஐஆா் பாா்வையாளராக செயல்பட்டவா்!

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?

மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்?
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



